

'மிருதன்' இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் படத்தில் நடிக்க சூர்யா மற்றும் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'மிருதன்' திரைப்படம் நாளை (பிப்ரவரி 19) வெளியாக இருக்கிறது. மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இப்படத்தைத் தொடந்து சக்தி செளந்தர்ராஜன் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. "'மிருதன்' படத்தை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக இருப்பதால் சக்தி செளந்தர்ராஜன் தனது அடுத்த படம் குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை" என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், சூர்யாவுக்கு சக்தி செளந்தர்ராஜன் கதை கூறியிருப்பதாகவும், விரைவில் இருவரும் சேர்ந்து படம் பண்ணவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சூர்யா தரப்பில் விசாரித்த போது, "'24' படத்தின் டப்பிங் மற்றும் 'சிங்கம் 3' படப்பிடிப்பு என மும்முரமாக இருக்கிறார் சூர்யா. அதனைத் தொடர்ந்து த்ரிவிக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து நடிக்கவிருக்கும் படத்துக்கு அவர் பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்" என்று தெரிவித்தார்கள்.
விக்ரமை சந்தித்து இயக்குநர் சக்தி செளந்தராஜன் பேசியிருக்கிறார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனின் அடுத்த படத்தை தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் சக்தி செளந்தர்ராஜன் கதைக்கு எந்த நடிகர் தேதிகள் ஒதுக்கவிருக்கிறார் என்பது விரைவில் தெரியவரும்.