

மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் கார்த்தி மற்றும் சாய் பல்லவி இருவரும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'ஓ காதல் கண்மணி' படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து நடிக்க ஒரு புதிய படத்தை மணிரத்னம் தொடங்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், அக்கதைக்கு நாயகர்கள் தேதிகள் சரியாக அமையாததால் அப்படத்தை ஒத்தி வைத்தார்.
தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கான கதை எழுதி முடித்துவிட்டார் மணிரத்னம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்கவிருக்கிறது. 'தோழா' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து, 'காஷ்மோரா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. அப்படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார். இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தின் நாயகியாக 'ப்ரேமம்' படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக மணிரத்னத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். அப்படத்தின் நாயகி வேடத்திற்கான கதாபாத்திர தெரிவுச் சுற்றில் கலந்து கொண்டு தேர்வாகி இருக்கிறார் சாய் பல்லவி.
கார்த்தி, சாய் பல்லவி உடன் மற்ற பாத்திரங்களின் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.