

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்துக்கு மாதவன் - விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
சுதா இயக்கத்தில் மாதவன், ரித்திகா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'இறுதிச்சுற்று' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தை சசிகாந்த் தயாரித்திருந்தார்.
தற்போது மீண்டும் சசிகாந்த் தயாரிக்கும் படத்தில் நடிக்க மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இப்படத்தை புஷ்கர்-காயத்ரி இணை இயக்கவிருக்கிறது. இவர்கள் தான் 'இறுதிச்சுற்று' படத்தில் இயக்குநர் சுதாவுக்கு பக்கபலமாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
'விக்ரம்-வேதா' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி தாதாவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மாதவனை என்கவுண்டர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வைக்க இருக்கிறார்கள்.
"இப்படம் உருவாக இருப்பது உறுதி. மாதவன், விஜய் சேதுபதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஏப்ரல் முதல் வாரத்தில் முறைப்படி அறிவிப்போம்" என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவித்தார்கள்.