

'இறுதிச்சுற்று' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மணிரத்னம் பாராட்டியது தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்று சுதா குறிப்பிட்டார்.
மாதவன், ரித்திகா, நாசர், ராதாரவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுதா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'இறுதிச்சுற்று'. சசிகாந்த் மற்றும் சி.வி.குமார் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை யு.டிவி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், பல்வேறு திரையரங்குகளில் 'இறுதிச்சுற்று' படத்துக்கு காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், தற்போது வெளியாகி இருக்கும் படங்களை விட 'இறுதிச்சுற்று' படத்துக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தார்கள்.
இயக்குநர் சுதா தன்னுடைய குருநாதர் மணிரத்னம் 'இறுதிச்சுற்று' படத்தை எடிட்டிங்கில் இருந்த போது பார்த்ததாகவும் 'குட்' என்று சொன்னதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், விரைவில் திரையரங்கில் மணிரத்னம் பார்க்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இப்படத்தை திரையரங்கில் பார்த்த மணிரத்னம், இயக்குநர் சுதாவை வெகுவாக பாராட்டியிருக்கிறார். "அற்புதமான படம், குட் ஷோ. உன்னுடைய அடுத்த படத்தை விரைவில் காட்டு" என்று மணிரத்னம் கூறியதாக இயக்குநர் சுதா தெரிவித்தார்.
மேலும், தன்னை தட்டிக் கொடுத்துப் பாராட்டி விரைவில் இன்னும் உயரமான இடத்துக்கு வருவாய் என வாழ்த்தியது தன்னால் மறக்க முடியாத ஒன்று என்றும் இயக்குநர் சுதா குறிப்பிட்டார். அவருடைய பாராட்டால் மிகவும் நெகிழ்ந்துவிட்டதாகவும் கூறினார்.
இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்க, இயக்குநர் சுதாவே இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.