அவளுக்கென பாடல் உருவானதன் பின்னணி: விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

அவளுக்கென பாடல் உருவானதன் பின்னணி: விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி
Updated on
1 min read

'அவளுக்கென' பாடலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, பல பாடல்கள் பண்ண தூண்டுகோலாக அமைந்திருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விக்னேஷ் சிவன் எழுத அனிருத் இசையமைப்பில் காதலர் தினத்தன்று வெளியான பாடல் 'அவளுக்கென'. யு-டியுப் தளத்தில் வெளியாகி இருக்கும் அப்பாடலுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்பாடலின் நோக்கம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேட்ட போது, "கடந்த ஆண்டு காதலர் தினத்துக்கு 'எனக்கென்ன யாருமில்லையே' என்று ஒரு பாடல் பண்ணியிருந்தோம். இனி எல்லா ஆண்டிலும் காதலர் தினத்துக்கு இளைஞர்களை முன்வைத்து ஒரு பாடல் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம்.

இந்த வருடம் என்ன திட்டம் என்றால், காதல் என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவான ஒன்று தான். ஆண், பெண் உறவில் காதல் என்பது மிகவும் ஸ்பெஷல் தான். அது தான் 'அவளுக்கென' பாடல். அப்பாடலைப் பார்த்தீர்கள் என்றால் ஒரு தாத்தா, கொஞ்சம் வயதானவர் ஒருவர், ஓர் இளைஞர் என மூவரின் காதலுக்குள் இருக்கும் க்யூட்டான விஷயங்களை வைத்து தான் பண்ணினோம்.

எப்போதுமே காதல் என்றால் ஒரு ஆணின் பார்வையிலேயே இருக்கும். இப்பாடலின் இடையே பெண்ணின் பார்வையிலும் காதல் என்பதைச் சேர்த்தோம். நாம் என்ன செய்தாலும் இறுதியில் காதலுக்காக தான் என்பது தான் அப்பாடலின் அர்த்தம்" என்று தெரிவித்தார்.

பெரும் வரவேற்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "எந்த ஒரு படத்தைச் சார்ந்தும் இல்லாமல் தனியாக ஒரு பாடல் பண்ணியிருக்கிறோம். முன்பு சென்னைக்காக பண்ணினோம். இதில் காதல் என்பதை முன்வைத்து பண்ணினோம். இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

தனிப் பாடல் என்றாலே படத்தில் தான் வர வேண்டும் என்று இல்லாமல், நாம் என்ன சொல்ல வருகிறோமோ அதை ஒரு பாடலாக பண்ணலாம் என்ற ஒரு நம்பிக்கையை இது கொடுத்திருக்கிறது. இந்த வரவேற்பு இன்னும் என்னை பல பாடல்கள் பண்ணத் தூண்டியிருக்கிறது" என்று சந்தோஷத்துடன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in