நான் நிச்சயம் முழுநேர நடிகனாவேன்: எஸ்.ஏ.சி நம்பிக்கை

நான் நிச்சயம் முழுநேர நடிகனாவேன்: எஸ்.ஏ.சி நம்பிக்கை
Updated on
1 min read

'நையப்புடை' ஒரு முழு நடிகனாக என்னை நிலைநிறுத்தும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜய் கிரண் இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய், சாந்தினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'நையப்புடை'. தாஜ்நூர் இசையமைத்திருக்கும் இப்படத்தை காஸ்கோ வில்லேஜ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. நாளை (பிப்ரவரி 26) இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, "நான் கடந்த 35 ஆண்டுகளாக திரையுலகில் உங்கள் ஆதரவோடு பயணம் செய்து வருகிறேன். இப்போது எனக்கு வயது 73 ஆகிறது. இதுவரை நான் 70 திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். இன்று 'நையப்புடை' படத்தின் மூலமாக ஒரு முழு நேர நடிகனாக பிறவி எடுத்துள்ளேன்.

நான் எதைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடும், உறுதியோடும் ஒரு வேகத்தோடும், வெறியோடும் செயல்படுவேன். சிறுவயதில் இருந்தே இந்த பழக்கம் என்னை தொற்றிக்கொண்டது அதே போல் இந்த படத்திலும் என் வயதிற்கு மீறி உழைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

இந்த படத்தின் இயக்குனர் விஜய் கிரணுக்கு வயது 19 தான் ஆகிறது. அவர் என்னை அருமையாக வேலை வாங்கி இருக்கிறார். என் கதாபாத்திரத்தை இளைஞர்கள் ரசிக்கும்படியாக உருவாக்கியிருக்கிறார். இந்த 'நையப்புடை' படத்தை பார்க்கும் இளைஞர்களுக்கு இந்த கிழவனுக்கே இவ்வளவு வேகமும், துடிப்பும் இருக்கிறதே நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

அதே சமயம் இந்த படத்தை பார்க்கும் முதியவர்களுக்கு வயதான பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையை தொலைத்துவிட்டோமே என்று எண்ணி, மீண்டும் வாழ வேண்டும் என்ற உற்சாகம் பிறக்கும்.

கோபத்திற்கும், வயதிற்கும் சம்மந்தம் கிடையாது அது மனதிலிருந்து வருவது. தவறு நடக்கும் பொழுது கண்ணை மூடிக் கொண்டு செல்பவன் மனிதனே அல்ல. தவறு நடக்கும் போது கோபப்படு.. இல்லையென்றால் அதுவே தவறு என்று சேகுவேரா சொல்லி இருக்கிறார்.

இளம் வயதில் நமக்கு ஏற்படுகின்ற உணர்வுகள், கோபதாபங்கள் இவையெல்லாம் கடைசி மூச்சு இருக்கும் வரை இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு இயக்குனர் விஜய் கிரண் அவர்கள் முழுக்க முழுக்க பொழுதுபோக்காகவும், விறுவிறுப்பாகவும் ஒரு அதிரடி ஆக்‌ஷன் படமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படம் ஒரு முழு நடிகனாக என்னை நிலைநிறுத்தும் என்று நம்புகிறேன்.

நான் அறிமுகம் செய்த அனைத்து கலைஞர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்து உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்திய உங்களிடம் ஒரு புதுமுக நடிகனாக அறிமுகம் ஆகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in