

'சார்பட்டா' படத்தின் வேம்புலி கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பை அஜித்துக்குச் சமர்ப்பித்துள்ளார் ஜான் கொக்கென்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆர்யா கதாபாத்திரம் தவிர்த்து வேம்புலி, டான்சிங் ரோஸ் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள். இதில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஜான் கொக்கென். அஜித்துடன் 'வீரம்' படத்திலும் நடித்திருந்தார். மேலும், 'பாகுபலி', 'கே.ஜி.எஃப் சாப்டர் 1' படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது 'சார்பட்டா பரம்பரை' படத்தின் வேம்புலி கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பை அஜித்துக்குச் சமர்ப்பித்துள்ளார் ஜான் கொக்கென்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஜான் கொக்கென் கூறியிருப்பதாவது:
"நன்றி தல அஜித் சார். நான் என்னையே நம்புவதற்கு எப்போதும் நீங்கள்தான் உத்வேகம் அளித்து உற்சாகப்படுத்தினீர்கள். 'வீரம்' படப்பிடிப்பின்போது உங்களுடன் நான் செலவழித்த நேரம் என் வாழ்க்கைக்கான பாடமாக மாறியது. ஒவ்வொரு நாளும் கடின உழைப்பைச் செலுத்த நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். அதுமட்டுமல்ல நல்ல மனிதராக இருக்கவும் நீங்களே எனக்குக் கற்றுத் தந்தீர்கள். வேம்புலி கதாபாத்திரத்தை நான் உங்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன் சார். என்றும் அன்புடன்".
இவ்வாறு ஜான் கொக்கென் தெரிவித்துள்ளார்.