

“தமிழில் திரும்ப நடிக்க வரப்போறீங்களாமே' னு பலரும் கேட்குறாங்க. ஆமாம், எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு!’’ என்றபடி பேசத் தொடங்குகிறார் பிரபுதேவா.
‘எங்கள் அண்ணா’ படத்துக்கு பிறகு தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிக்க வருகிறார், பிரபுதேவா. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வரவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தவரை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.
நீங்களும், ஏ.எல்.விஜய்யும் இணைந்து படத் தயாரிப்பு பணியில் இருக்கும் சூழலில் நீங்கள் ஹீரோ அவர் இயக்குநர் என்ற நிலை எப்படி உருவானது?
தயாரிப்பு நிறுவனம் தொடங்கலாம்னு முடிவெடுத்தப்போ முதல் படத்துக்கு இயக்குநர் பிரியதர்ஷனை கொண்டு வந்து சேர்த்ததே ஏ.எல்.விஜய்தான். தயாரிப்பாளர் என்பதால் நிறைய கதைகளை கேட்கத் தொடங்கினேன். அப்போ விஜய்யும் கதைகள் சொன்னார். அவர் சொன்னதுல ஒரு கதை ரொம்பவே பிடித்தது. அந்தக் கதைக்கு ஹீரோவை தேர்வு செய்யும் வேலையில் இறங்கினோம். அப்போதுதான் இயக்குநர் விஜய்யும், தயாரிப்பு குழுவில் இருந்தவங்களும், ‘நீங்களே இந்தக் கதையில நடிக்கலாமே?’ன்னு சொன்னாங்க. என்னை ரொம்பவும் ஈர்த்த கதை. நான் தயாரிப்பாளர். ஹீரோ ஃப்ரீ. என்கூட சோனு சூட், தமன்னா நடிக்கிறாங்க. பிப்ரவரி 12-ம் தேதி ஷூட்டிங். புனே, மும்பை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு கிளம்பறோம்.
படத்தின் கதை என்ன?
இது ‘ஹாரார்’ கலந்த காமெடி படம். எமோஷனல் அதிகம் இருக்கும். கணவன், மனைவிக்குள் இருக்கும் அன்பை புதிய கோணத்தில் வெளிப்படுத்தும். நவீனமான நகர வாழ்க்கையை விரும்பி வரும் சிலருக்கு படத்தில் செய்தி சொல்லியிருக்கோம். இதுபோன்ற படத்தை இயக்கணும்னு எனக்கும் விருப்பம் உண்டு. இப்போ நடிக்கிறேன். அதேபோல, படத்துக்கு 4 இசையமைப்பாளர்களை வைத்து இசையமைக்கும் வேலைகளும் நடந்து வருகிறது.
முதன்முறையாக தமன்னா உங் களுடன் நடிக்கிறாரே?
ஆமாம். தமன்னாவோடு சேர்ந்து ஒரு பாட்டுக்கூட நான் கொரியோ கிராஃப் செய்ததில்லை. அண்ணன் ராஜூ அவருக்கு நடன இயக்குந ராக இருந்திருக்கார். முதன்முறை யாக தமன்னா என்னோடு படத் தில் நடிக்கிறார். இதில் நடிக்க தமன்னாவும் ஆர்வமாக இருக் கிறார். படத்தில் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம்.
பாலிவுட்டில் பரபரப்பான இயக்கு நராக இருக்கும் நீங்கள், தமிழில் மற்றொரு இயக்குநரிடம் உங்களை ஒப்படைக்கப் போகிறீர்களே?
சமீபத்தில்கூட இந்தியில் ‘ஏபிசிடி’ படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் இயக்குநர் என்ன எதிர்பார்த்தாரோ அதை மட்டும்தான் செய்தேன். நடன இயக்குநராக வேலை பார்க்கும்போதும் அந்தப் படத்தின் இயக்குநரோட தேவை என்ன என்பதை புரிந்து அதை செய்வேன். இந்தப் படத்துக்கும் அப்படித்தான். ஒருவரை நம்பி நம்மை ஒப்படைக்கிறோம். அப்படி இருக்கும்போது அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தானே செய்யணும்.
கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு தமிழில் படம் செய்ய பேச்சுவார்த்தை நடந்ததே?
அந்த வேலைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. பெரிய படங்கள் பண்ணுவது அவ்வளவு எளிதான வேலை இல்லை. அது அமையணும்.
‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் தொடங்கிய 3 படங்கள் இப்போது எந்த நிலையில் உள்ளன?
இயக்குநர் பிரியதர்ஷனின் படம் முடிந்தது. அதை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் வேலைகளில் இயக்குநர் இருக்கிறார். ‘வினோதன்’ படம் 75 சதவீதம் முடிந்தது. அடுத்து லஷ்மண் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கவிருக்கும் படத்தை விரைவில் தொடங்கவுள்ளோம். அதோடு என் நடிப்பில் திட்டமிட்டுள்ள படத்தின் வேலையும் இணைந்துள்ளது.
தங்கர் பச்சான் இயக்கத்தில் நீங்கள் நடித்த ‘களவாடிய பொழுதுகள்’ படம் ரிலீஸாவது தள்ளிப்போகிறதே?
நல்ல படம். அது ரிலீஸாக வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருக்கிறேன். அதுக்கு சரியான நேரம் அமையும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரையும் போல எனக்கும் இருக்கிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ் மான் இசைக்காக பள்ளி தொடங்கி திறமையான இசைக் கலைஞர்களை உருவாக்கி வருகிறார். நடனத்தில் அது போல் செய்யும் எண்ணம் இருக்கிறதா?
எண்ணம் உள்ளது. அது மாதிரி யான வேலைகளுக்கு தனித்த அர்ப்பணிப்பு இருக்கணும். அதை சரியாக கொண்டுபோக ரெண்டு, மூணு சக்தி தேவைப்படுகிறது. அதற்காக காத்திருக்கிறேன்.
ஷாரூக், சல்மான் கான் போன்றவர் களோடு இந்தியில் எப்போது இணையப்போகிறீர்கள்?
கதை எழுதும் வேலைகள் நடந்து வருகிறது. ஷாரூக், சல்மான் நடிப்பார் களா? என்பதெல்லாம் இப்போது தெரியாது. இந்தி மாதிரி தமிழிலும் முக்கியமான எழுத்தாளர்களோடு அமர்ந்து வேகமாக கதைகளை உருவாக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. பார்க்கலாம்.