

தனுஷ் ரசிகர்கள் சிலர் மீது கோபமடைந்து, சில பதிவுகளை ஷான் ரோல்டன் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் - ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவான முதல் படம் 'ப.பாண்டி'. இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து 'வேலையில்லா பட்டதாரி 2' படத்திலும் இணைந்து பணிபுரிந்தார்கள். ஆனால், அதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எதுவுமே மக்களிடம் எடுபடவில்லை.
அதற்குப் பிறகு தனுஷ் - ஷான் ரோல்டன் இருவருமே இணைந்து பணிபுரியவில்லை. ஆனால், நண்பர்களாக வலம் வருகிறார்கள். அவ்வப்போது தனுஷுடன் மீண்டும் இணைந்து பணிபுரியாதீர்கள் என்று ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்து வந்துள்ளனர். அதுமட்டுமன்றி, ஜூலை 17-ம் தேதி தனது தரப்பிலிருந்து பெரிய அறிவிப்பு ஒன்று வரவிருப்பதாகத் தெரிவித்தார் ஷான் ரோல்டன்.
இந்த ட்வீட்டை முன்வைத்து மீண்டும் தனுஷுடன் பணிபுரியவுள்ளார் என நினைத்து, பலரும் வேண்டாம் என்று தொடர்ச்சியாக ட்வீட் செய்துள்ளனர். இதனால் ஷான் ரோல்டன் கடும் கோபமடைந்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் ஷான் ரோல்டன் கூறியிருப்பதாவது:
" 'விஐபி 2' பற்றிய சில தகவல்கள். ஒட்டுமொத்தப் படத்தையும் முடிக்க எனக்கு 3 நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயமற்ற காலக்கெடு. தனுஷ் சார் இதைப் பற்றிப் பேசியுள்ளார். ஆனால் ‘சில’ மோசமான இதயமில்லாத தனுஷ் ரசிகர்கள் அதைப் பற்றிய பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய அறிவிப்புகள் உங்களுக்காக இல்லை. நீங்கள் அமைதியாக இருக்கவும்.
எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுத்த தனுஷ் ரசிகர்களுக்காக மட்டுமே இது. எதிர்காலத்தில் அவருடன் தனித்துவமான பல படங்களில் தொடர்ந்து பணிபுரியவுள்ளேன். உங்கள் காதுகளுக்கு உற்சாகமான, மகிழ்ச்சி ததும்பும் இசையைக் கொண்டுவருவேன். அதற்கான சரியான நேரம் வரட்டும்".
இவ்வாறு ஷான் ரோல்டன் தெரிவித்துள்ளார்.