'விக்ரம்' 200 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கும்: ரத்னகுமார்

'விக்ரம்' 200 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கும்: ரத்னகுமார்
Updated on
1 min read

கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படம் 200 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கும் என்று இயக்குநரும், 'விக்ரம்' படத்தின் கதாசிரியருமான ரத்னகுமார் ட்வீட் செய்துள்ளார்.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தை இயக்க ஒப்பந்தமானார் லோகேஷ் கனகராஜ். கமலின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து டர்மரீக் மீடியா நிறுவனமும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத், சண்டைக் காட்சிகளின் இயக்குநர்களாக அன்பறிவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

முன்னதாக, படத்தின் பெயரை டீஸர் ஒன்றின் மூலமாக அறிவித்தது படக்குழு. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. .

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் மூலம் கமலுடன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பதை உறுதி செய்துள்ளது படக்குழு.

இந்த முதல் பார்வை போஸ்டரைப் பகிர்ந்திருக்கும் 'மேயாத மான்', 'ஆடை' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ரத்னகுமார், "திறமையான கதாசிரியர், முழுமையான நடிகர் கமல்ஹாசனுக்காக எழுதுவது உயரிய கௌரவம். 'மாஸ்டர்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி லோகேஷ் கனகராஜ். 'விக்ரம்' 200 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

இயக்குநர் ரத்னகுமாரும், லோகேஷ் கனகராஜும் நெருங்கிய நண்பர்கள். 'மாஸ்டர்' படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜோடு சேர்ந்து ரத்னகுமாரும், பொன்.பார்த்திபனும் வசனம் எழுதினர். தற்போது 'விக்ரம்' படத்தில் மீண்டும் ரத்னகுமார் பணியாற்றுவது இந்த ட்வீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in