முடிவடையாத 'பகலவன்' சர்ச்சை: மீண்டும் சீமான் Vs லிங்குசாமி!

முடிவடையாத 'பகலவன்' சர்ச்சை: மீண்டும் சீமான் Vs லிங்குசாமி!
Updated on
1 min read

'பகலவன்' திரைப்படத்தின் கதை தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. இயக்குநர் லிங்குசாமிக்கு எதிராக இயக்குநர் சீமான் அளித்த புகாருக்கு, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் பதிலளித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி, நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஒரு திரைப்படம் எடுப்பதாக முடிவானது. ஆனால், அந்தக் கதை சீமான் எழுதிய 'பகலவன்' என்று பெயரிடப்பட்ட கதையைப் போல இருந்ததாகக் கூறப்பட்டது. பகலவனில் முதலில் விஜய்யும், பின் விக்ரமும் நாயகனாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில் ஜெயம் ரவி நாயகனாக நடிப்பார் என்று இறுதி செய்யப்பட்டது.

இரண்டு கதைகளுக்கும் ஒற்றுமை இருப்பது தெரியவந்த பிறகு லிங்குசாமிக்கு எதிராக இயக்குநர்கள் சங்கத்தில் புகாரளிக்க சீமான் முடிவு செய்தார். ஆனால், அப்போதைய இயக்குநர் சங்கத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த இயக்குநர் விக்ரமன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் தலையீட்டால் இந்தப் பிரச்சினை பேசி, சுமுகமாகத் தீர்க்கப்பட்டது. இதன்படி, சீமான் தமிழிலும், லிங்குசாமி மற்ற மொழிகளிலும் இந்தப் படத்தை எடுக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆனால், சமீபத்தில் லிங்குசாமி, தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் திரைப்படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் கதையும், ’பகலவன்’ கதையும் ஒரே மாதிரி இருப்பதால் இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து லிங்குசாமியிடம் இயக்குநர் சங்கம் விளக்கம் கோரியது. இந்த விஷயம் 2013ஆம் ஆண்டே தீர்க்கப்பட்டுவிட்டது என்று லிங்குசாமி பதில் கூறியுள்ளார். இதைப் பரிசீலித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ், 2013 ஒப்பந்தத்தை லிங்குசாமி மீறவில்லை என்றும், எனவே சீமான் கொடுத்த புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் பதில் அளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in