படப்பிடிப்புத் தளத்தில் விஜய் நடந்துகொண்ட விதம்: கவின் பகிர்வு

படப்பிடிப்புத் தளத்தில் விஜய் நடந்துகொண்ட விதம்: கவின் பகிர்வு
Updated on
1 min read

'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்புத் தளம், பூஜையின்போது விஜய் நடந்துகொண்ட விதம் குறித்து கவின் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பாடலொன்றைப் படமாக்கி வருகிறார்கள். இதற்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்து வருகிறார்.

இந்தப் படத்தில் நெல்சனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார் கவின். இது தொடர்பான புகைப்படங்கள், செய்திகள் என அனைத்துமே வெளியாகிவிட்டன. தற்போது 'பீஸ்ட்' படப்பிடிப்புத் தளம், படத்தின் பூஜையின் அன்று விஜய் நடந்துகொண்ட விதம் தொடர்பாக கவின் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

விஜய் தொடர்பாக கவின் பேசியிருப்பதாவது:

" 'பீஸ்ட்' படத்துக்காக முதலில் ஒரு டெஸ்ட் ஷூட் செய்தோம். அதற்கு விஜய் சார் வரும்போது, உதவி இயக்குநர்கள் அனைவருமே ஒரே வரிசையில் நின்றோம். எங்களைத் தாண்டித்தான் போக வேண்டும் என்ற நிலை. அப்போது ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். என்னை 'கவின்' என்று அறிமுகப்படுத்தியவுடன், 'ஹாய்' எனச் சிரித்தார். 2 விநாடியில் நின்று பேசியதே எனக்குப் பறப்பது போல் இருந்தது.

அதனைத் தொடர்ந்து படத்தின் பூஜை நடைபெற்றது. அதற்கு முந்தைய நாள்தான் 'அஸ்கு மாரோ' பாடல் வெளியானது. 'பீஸ்ட்' பூஜைக்கு வரும்போது ஒவ்வொருவராகப் பார்த்து ஹாய் சொல்லிக் கொண்டே வந்தார். என்னைப் பார்த்து, "உங்க பாட்டு பார்த்தேன். செமயாக இருந்தது" என்றார் விஜய் சார். சிவாங்கி பாணியில் "எனக்கு இது போதும்" என்று உள்மனசு சொல்லிக்கொண்டே இருந்தது.

பூஜை அன்றே அனைவரும் நின்று புகைப்படம் எடுத்தோம். அப்போது நெல்சனிடம் உதவி இயக்குநர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டு எடுத்தார். நான் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தேன். உடனே பக்கத்துல வாங்க ப்ரோ என்று அழைத்துப் புகைப்படம் எடுத்தார்".

இவ்வாறு கவின் தெரிவித்துள்ளார்.

'சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்த கவின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பரவலாக அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in