Published : 06 Jul 2021 03:38 PM
Last Updated : 06 Jul 2021 03:38 PM

‘மைக்கேல் மதன காமராஜன்’ வெளியாகி 30 ஆண்டுகள்: கமல்ஹாசன் பகிர்ந்த அரிய தகவல்கள்

கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்த படம் 'மைக்கேல் மதன காமராஜன்'. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், மனோரமா, நாசர் எனப் பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. இதில் கமல்ஹாசன் மைக்கேல், மதன், காமேஷ்வரன், ராஜு என்று நான்கு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'மைக்கேல் மதன காமராஜன்' வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் உருவான விதம் குறித்தும், படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த நுட்பங்கள் குறித்தும் கமல்ஹாசன் தனது முகநூல் பக்கத்தில் விரிவான விளக்கத்தைப் பல பதிவுகளாக வெளியிட்டிருந்தார்.

கமல்ஹாசனின் அந்த நீண்ட பதிவில் முக்கியமான சில பகுதிகளின் மொழிபெயர்ப்பை இங்கே தொகுத்து வெளியிட்டுள்ளோம்.

இனி கமல்ஹாசன் பேசியது இங்கே:

சாப்ளின் என்னை நம்பிக்கை இழக்கச் செய்த ஒரு மனிதர். நான் அவருடைய படங்களைப் பார்த்தபோது ஒரு இயக்குநராக/ நடிகனாக ஆகும் தகுதி எனக்கு இருக்கிறதா என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இந்தக் கேள்விகள் அனைத்தும் எனக்குள் நிறைந்து கிடந்தன, காரணம் அவர் ஏராளமான பணிகளைச் செய்திருந்தாலும், அவரது தலையைச் சுற்றியிருந்த ஒளி மங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அவரது மகள் ஜெரால்டின் சாப்ளின் அவருக்கு ஒரு மிகப்பெரிய சேவையைச் செய்து அவரது ஆளுமை குறைந்தபட்சம் இன்னொரு 100 ஆண்டுகளுக்கேனும் நீடிக்கும் வண்ணம் அவரது பழைய கேமரா பதிவுகளை ஒன்றுதிரட்டி ‘அன்னோன் சாப்ளின்’ (Unknown Chaplin) என்ற ஒரு படத்தை உருவாக்கினார்.

ஒரு கலைஞனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி அவனை மேலும் ஏங்கச் செய்யும் கைதட்டல்கள் சிறந்தவை அல்ல. மாறாக அது ஒரு போதை. உங்களுக்குக் கிடைக்கும் பாராட்டுகளையும், உங்கள் பணிகளையும், வருமானத்தையும் எப்படி வேறுபடுத்துவது? அது பெரும்பாலான நடிகர்களை நாசமாக்கும் ஒரு வகைப்படுத்துதல். ஹீத் லெட்ஜரின் தற்கொலை கூட அதிலிருந்து வந்ததுதான். குரு தத்தின் தற்கொலையும் அதே காரணத்தால்தான். அவர் ஒரு மஹா குருவாக மாறியிருக்க முடியும். நான் அவரிடமிருந்து நிறைய கற்றிருக்க முடியும். அதுதான் இன்றைக்கும் அவர் மீதான் எனது கோபமும், சோகமும் கூட.

மைக்கேல் மதன காமராஜனைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் நகைச்சுவை ஒரு தீவிரமான விஷயம் என்று கூறுவார்கள். அதற்காக நாம் கண்ணீரைச் சிந்தவும், வியர்வையைச் சிந்தவும், ஏன் ரத்தத்தைச் சிந்தவும் கூட தயாராக இருக்க வேண்டும். ஆனால், உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரும் சிரிப்பார்கள். இதைப் பற்றி ஒரு கோமாளியிடம் கேட்டுப் பாருங்கள். அவர் சொல்வார். குட்டிக்கரணங்கள் வலி மிகுந்தவை. மட்டையால் அடிவாங்குவதும் வலி மிகுந்ததுதான் என்றாலும் அவருக்குக் கிடைக்கும் கைதட்டலும், ஆராவாரமும் பெரிது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எதுவும் சுலபம் இல்லை. வெறுமனே ஒரு பந்தின் மீது நிற்பது உங்களுக்குப் போதுமான கைதட்டலை பெற்றுத் தந்துவிடாது. ஒரு ஆபத்தான தந்திரமே கைதட்டலைப் பெற்றுத் தரும். இவை அனைத்தையும் தெரிந்துகொண்டு அங்கு போகாமல் இருப்பதே துணிச்சல்.

சிங்கீதம் சீனிவாசராவ் உடனான நட்பு

சிங்கீதம் என்னிடம் வரும்போது நான் கொச்சியில் ‘சாணக்யா’ என்ற ஒரு மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ‘ராஜ பார்வை’ படத்தின்போது கூட அவர் என்னிடம் ‘அத்வைதா’ என்ற ஒரு படத்தை எடுப்பது பற்றிக் கூறினார். சிங்கீதம் அதன் பிறகு ‘திக்கற்ற பார்வதி’, ‘வம்ச விருக்‌ஷா’, உள்ளிட்ட கலைப்படங்களின் பக்கம் சென்றுவிட்டார். ‘வம்ச விருக்‌ஷா’ திரைப்படம் பிரபலமான கர்நாடகா மாற்று சினிமா இயக்கத்தின் ஒரு முக்கிய படமாக இருந்தது. அனைத்து முரண்களையும் களைந்து தனக்காக ஒரு இடத்தை அவர் உருவாக்கினார். பல ஹிட் படங்களை இயக்கிய பிறகும் ‘பாஸ்ஸேஜ் டு இந்தியா’ என்ற படத்தை எடுக்க இந்தியா வந்திருந்த டேவின் லீன் உடன் ஒரு உதவி இயக்குநராக சேர்ந்து விட்டார். அதுதான் சிங்கீதம். அவரைப் போல என்னால் ஒரே நேரத்தில் அறிவுறுத்த முடிந்த, கடிந்துகொள்ள முடிந்த, பாராட்ட முடிந்த ஒருவரை நான் அதற்கு முன்பு கண்டதில்லை.

பாலுமகேந்திரா மற்றும் கே.பாலசந்தர் ஆகியோர் மற்ற இருவர்கள். ஆனால் முதலாமவர் ஒரு ஆசிரியராகவும் இருந்தார், இரண்டாமவர் எல்லாமுமாக இருந்தார்.

சிங்கீதம் எப்போதும் நாங்கள் இருவரும் ஒரே தரத்திலானவர்கள் என்று நினைப்பதுண்டு. ஆனால் நாங்கள் வெவ்வேறு. ஒரு குழந்தை போன்ற நட்புக்கு இடையே வயது மட்டுமே ஒரே இடைவெளியாக இருந்தது. யாரேனும் உங்களிடம் ஒரு விஷயத்தைக் காட்டி ‘நன்றாக இருக்கிறதல்லவா?’ என்று கேட்டால், அவர் நீங்கள் சரியான பதிலைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. மாறாக அவர் தனது சந்தேகத்தை உங்களிடம் வெளிப்படுத்துகிறார். அதைச் செய்வதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சிங்கீதம் அப்படிப்பட்ட ஒரு நபர். வெகுசிலரே அவ்வாறு செய்யக் கூடியவர்கள். பதிலோடு இணைந்த கேள்வியை நீங்கள் கேட்டால் அது நல்ல கேள்வியாக இருக்காது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், நான் அதை ஒப்புக் கொள்வதில்லை. காரணம் அது ஏற்றுக் கொள்வதற்கான ஒரு விருப்பத்தின் பிரதிபலிப்பாக இருக்கலாம். நான் அப்படிப்பட்டவனா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், சிங்கீதம் அப்படிப்பட்டவர். அதனால்தான் வயது வித்தியாசம் இருந்தாலும் நாங்கள் நண்பர்களானோம்.

மைக்கேல் மதன காமராஜனுக்கான விதை எங்களுடைய முந்தைய படைப்பான ‘புஷ்பக்’ படத்திலிருந்து கிடைத்தது. அப்படத்தில் கிடைத்த பயிற்சிதான் எங்களுக்கு ‘அபூர்வ சகோதரர்கள்’ எடுக்கும் பலத்தைக் கொடுத்தது. ‘அபூர்வ சகோதரர்கள்’ வெற்றிக்குப் பிறகு தொழில்நுட்பக் குழந்தைகளாக இருந்த நாங்கள் மீண்டும் ஒருமுறை பொழுதுபோக்குப் படமெடுப்பவர்களாக மாற விரும்பினோம். நான் ‘அப்பு 2’ எடுக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். அப்படத்தில் அப்பு ஜெயிலில் இருந்து தப்பிப்பது போல காட்ட விரும்பினேன். அப்படத்தில் உயரமான மலைகளில் ஒரு உயர் அழுத்த கேபிளில் நடப்பது போன்ற ஒரு காட்சியைக் கூட யோசித்திருந்தேன். அந்த கேபிளில் அப்பு ஒருவனால் மட்டும் நடக்க இயலும். ஆனால், திரதிர்ஷ்டவசமாக அவன் ஒரு காற்று மிகுந்த நாளைத் தேர்வு செய்கிறான். அன்று தன்னுடைய குச்சியையும் அவன் இழக்கிறான். இன்றும் நான் அதுபோன்ற ஒரு ஹைவயர் (HighWire) ஆவணப்படத்தைப் பார்க்கும்போது அந்தக் குட்டை மனிதன் நடக்கும் காட்சிதான் ஞாபகம் வரும். ‘அப்புராஜா’ படத்துக்குப் பிறகு அதுதான் என்னுடைய மனநிலையாக இருந்தது. ஆனால், நாங்கள் தொழில்நுட்பக் குழந்தைகளாக இருப்பதை நிறுத்தி பொழுதுபோக்குப் படமெடுப்பவர்களாக மாற விரும்பினோம். அந்த நேரத்தில் நானும், சிங்கீதமும் எங்கள் தொழில்நுட்பக் கலைஞர் ஒருவரது திருமண விழாவுக்காக பாம்குரோவ் ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். அங்கு நாங்கள் இருவரும் பி.சி.ஸ்ரீராமிடம் நான்கு கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தை உருவாக்க விரும்புவதாகக் கூறினோம். ஆனால், அவர் மிக விரைவாக முடியாது என்று கூறிவிட்டார்.

‘மைக்கேல் மதன காமராஜன்’

‘மைக்கேல் மதன காம ராஜ’னின் கதை சாதாரணமானது. அது ‘யாதோன் கி பாரத்’ X 2 அல்லது ‘தெய்வமகன்’ +1, எம்ஜிஆரின் ‘நாடோடி மன்னன்’ X 2 போன்றதுதான். பல்லாண்டுகாலமாக திரும்ப திரும்பச் சொல்லப்பட்ட ஒரு பழைய கதை. நான் முழுக்க முழுக்க அம்புக்குறிகளும், பெட்டிகளும் நிறைந்த ஒரு படத்தையும் அதில் க்ளைமாக்ஸ் என்று அழைப்படும் ஒரு உச்சகட்டத்தையும் வரைந்து விளக்கினேன். இப்படித்தான் அப்படம் தொடங்கியது. அதைப் புரிந்துகொண்ட சிங்கீதம் உடனடியாக சம்மதித்தார்.

படத்தில் முதலில் காமேஷ்வரனை ஒரு விஞ்ஞானியாகக் காட்ட விரும்பினோம். காரணம் ‘அப்புராஜா’ படத்தில் பலூன், சக்கரம் உள்ளிட்ட யோசனைகளை நாங்கள் பிரயோகித்திருந்தோம். எனவே ஒரு விஞ்ஞானி பாத்திரம் அவனது விநோதத் தன்மையுடன் ஒத்துப் போகும் என்று நினைத்தோம். ஆனால், காமேஷ்வரன் அதற்கு முழுமையாகப் பொருந்திப் போகவில்லை. மீண்டும் சொல்கிறேன், நான் இங்கு அந்த 4 பாத்திரங்களையும் எவ்வாறு உருவாக்கினோம் என்ற தொழில்நுட்பத்தைப் பற்றிப் பெசவில்லை. என்னை விட மூத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அவற்றை உங்களுக்குத் தெளிவாக விளக்குவார்கள். அது பிரச்சினையில்லை. 4 தனித்தனி சகோதரர்களின் கதையை உருவாக்கி அதனை விவரிப்பதில் நேரத்தைச் செலவழிக்க நான் விரும்பவில்லை. எனவே எங்களுக்கு ‘கதை கேளு, கதை கேளு’ பாடல் பற்றிய யோசனை வந்தது. படப்பிடிப்பில் திருவிழா செட்டில் பயோஸ்கோப் உடன் இருந்த நபர் எனது கண்ணில் பட்டார். அவர் மோஹிகன் இனத்தவரில் கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் அந்த பயோஸ்கோப்பை வைத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றதால் அவரிடமிருந்து நான் அதை வாங்கி வந்தேன். அங்கிருந்துதான் அந்த யோசனை தோன்றியது.

நான் சிங்கீதம் அவர்களிடம் பயோஸ்கோப் குறித்துச் சொன்னதோடு அவரையே அந்தப் பாத்திரத்தில் நடிக்கச் சொன்னேன். உங்களுடைய கதை சொல்லல் முறையை நிறுவ இதுவொரு சிறந்த வழியாக இருக்கும் என்றும் நீங்கள்தான் இதன் சூத்திரதாரி என்றும் கூறினேன். ஒரு குழந்தையைப் போல உற்சாகமான சிங்கீதம் இதற்கு ஒப்புக் கொண்டார். ஒரே மாதிரி தோற்றமுடைய நான்கு பேரைத் திரையில் காட்டுவதைக் காட்டிலும் இவை மிகப்பெரிய தொழில்நுட்பப் பிரச்சினைகள். அதை நினைத்து நான் பெருமையும் கொள்கிறேன். அது ஒரு நகைச்சுவைப் படம் என்று நிறுவ விரும்பிய நாங்கள் அதற்கான சூழலையும் மனநிலையில் ஒரு ஓப்பனிங் பாடலில் ஏற்படுத்த விரும்பினோம். வழக்கமாக நகைச்சுவைப் படமென்றால் போஸ்டர்களில் பெரிய தலைகளைக் கொண்ட கார்ட்டூன் படங்களை இடம்பெறச் செய்வார்கள். அதைப் போல இந்த பாடலை வேறொரு பிலிமிலும் வேகமாகவும் காட்சிப்படுத்தலாம் என்று உத்தேசித்தேன். எனவே கதை சொல்லும் நேரம் மிச்சமானது. ஆனால், அதன் பிறகு உடனடியாக விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நான் திருப்தி அடையவில்லை. அதிர்ஷ்டவசமாக அந்த திரைக்கதை எனக்கும் சிங்கீதம் அவர்களுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது.

காமேஷ்வரனும் மைக்கேலும்

காமேஷ்வரன் கதாபாத்திரம், ஒரு துப்புரவுத் தொழிலாளியோ அல்லது சமையல்காரரோ எதுவாக இருந்தாலும் அவன் ஒரு புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன்பிறகு எனக்கு ஒரு பாலக்காடு பிராமணர் கதாபாத்திரம் கிடைத்தது. எனது முதல் மனைவி பாலக்காட்டு பிராமணர். அவர்களுடைய ஏற்ற இறக்கப் பேச்சு வழக்கு எனக்குப் பிடித்திருந்தது. மலையாளப் படங்களில் பணிபுரிந்த அனுபவத்தினாலும், பல கேரள நண்பர்கள் இருந்ததாலும் மொழியில் ஏற்படும் சரி தவறுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. புகைப்படக் கலையில் என்னுடைய குருவான ரமாமணிக்கு நான் ஒரு பாலக்காடு பிராமணராக நடிப்பது மிகவும் பிடித்துப் போனது. அவர் என்னிடம் ‘உன்னைத் தவிர யாராலும் இதைச் செய்ய முடியாது’ என்று கூறினார். அப்படித்தான் காமேஷ்வரன் பிறந்தார்.

இந்திப் படங்களில் பணிபுரிந்திருந்த தாக்கத்தால் முதலில் படத்துக்கு ‘ஜாலி ஜக் ஜீவன் ராம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. யாருக்கும் அந்தப் பெயரில் திருப்தியில்லை. நாம் அனைவரும் இந்திக்கு எதிரான கிளர்ச்சியாளர்களாக இருப்பதால் இது எடுபடாது என்றும் கூறினார்கள். மதன காமராஜன் என்ற பெயரை கிரேஸி மோகன் பரிந்துரைத்தார். அதற்கு நான் சம்மதம் தெரிவித்துவிட்டேன். ஆனால், அது போதாது என்று எனக்குத் தோன்றியது. அத்துடன் மைக்கேல் என்ற பெயரைச் சேர்க்கலாம் என்று பரிந்துரை செய்தேன். அப்படித்தான் அந்தக் கதாபாத்திரம் பிறந்தது.

கோயம்புத்தூர் வட்டார மொழி எனக்குச் சரியாகத் தெரியாது என்பதால் மைக்கேலுக்கு திருநெல்வேலி வட்டார மொழியைப் பயன்படுத்த விரும்பினேன். காரணம் நான் அப்போது கோவை சரளாவைச் சந்தித்திருக்கவில்லை. மேலும், செய்திகளிலும் பேப்பரிலும் கோவையில் கள்ளநோட்டுகள் அச்சிடப்படுவதாகக் கேள்விப்பட்டிருந்தோம். எனவே அவனுக்கு அதனுடன் தொடர்பு இருப்பதாகக் காட்ட விரும்பினேன். இப்படித்தான் மைக்கேலின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது. நான்கு குழந்தைகளையும் வெவ்வேறு மதங்களில் இருப்பதாகக் காட்டவும் விரும்பினோம். ஆனால் அதைத் தெளிவாகக் காட்ட விரும்பாததால் அதை அப்படியே விட்டுவிட்டோம்.

‘சுந்தரி நீயும்’ பாடல் உருவான விதம்

முதலில் நாங்கள் எங்கள் சக கலைஞர்களைக் கிண்டல் செய்யவே விரும்பினோம். பெரும்பாலான திரைப்படங்களில் பின்னணியில் வெள்ளை உடை அணிந்துகொண்டு ஆடும் நடனக் கலைஞர்களைப் பார்க்கும்போது எனக்குக் கோபமே ஏற்படும். எனவே படத்தின் முதலிரவுக் காட்சியில் கைம்பெண்களை நடனம் ஆடச் செய்யலாம் என்று நாங்கள் தீர்மானித்தோம். அதற்குப் பின்னால் இருந்த காரணம், ‘திருப்பு’வுக்கு கைம்பெண் பாட்டி மட்டுமே ஒரே சொந்தம். ஆனால், அனைவரும் அதற்கு முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் இருவர் அதற்கு ஆதரவாக இருந்தோம். ஒருவர் இந்த யோசனையைச் சொன்ன சிங்கீதம், இன்னொருவர் சந்தேகமே இல்லாமல் நான்தான். அது எதிர்மறை விளைவை ஏற்படுத்திவிடும் என்று பஞ்சு அருணாச்சலம் அஞ்சினார். எனவே அப்பாடலை ஒரு பஜனையைப் போல, அதற்குப் பொருந்தும் வகையில் மார்கழி மாதத்தில் இருப்பது போல படமாக்க விரும்பினேன்.

ராஜாவைச் சந்தித்து அதற்கான ட்யூனை பாடிக் காட்டினேன். அவர் உடனடியாக ‘இது 1000 காலத்துப் பாரம்பரியம். இதை நான் செய்தே ஆக வேண்டும்’ என்று கூறினார். உடனடியாக நாங்கள் பாடல் உருவாக்கத்திற்காக அமர்ந்தோம், பாடல் வரிகளை எழுதுவதற்காக தமிழும் மலையாளமும் தெரிந்த ஒருவரை அழைத்து வந்தார். பாடல் பதிவுக்காக அனைத்தும் தயாராக இருந்தன. ராஜா பாடலுக்கான குறிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். இது எப்போதுமே மதிய உணவு இடைவேளையின் போதுதான் நடக்கும். ராஜாவைப் பொறுத்தவரை நாம் அவருடைய குறிப்பில் ஒரு சிறிய பகுதியைத் தவறவிட்டால் கூட அனைத்தையும் தவறவிட்டு விடுவோம். ஒரு வால் நட்சத்திரத்தைப் பார்ப்பது போல அவரை மிக கவனமாகப் பார்க்க வேண்டும்.

திடீரென்று ராஜா என்னிடம் வந்து ட்யூன் மிகவும் பழையதாக இருப்பதுபோலத் தோன்றுவதாகச் சொன்னார். ஆனால் நான் என்னுடைய மனதில் பழைய ட்யூனையே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்ததால் உடனடியாக அது பழையது என்றுதான் நமக்குத் தெரியுமே என்று கூறினேன். உடனே ராஜா அதை விட விரைவாக ‘ஆனால் நாம் புதியவர்கள் ஆயிற்றே’ என்று பதிலளித்தார். மேலும் முழுக்க முழுக்க டிரம்ஸ் உடன் கூடிய நவீன வடிவத்தை உருவாக்கினார். வெறும் பெயரளவில் மட்டுமே நவீனமாக இருக்கக் கூடாது என்று நான் அவரிடம் கூறினேன். அவர் தன் மீது நம்பிக்கை வைக்குமாறு கூறினார். பாடல் மிகவும் சிறப்பாக வந்ததால் அதுகுறித்து நான் பதற்றம் அடையவில்லை. ட்யூன் போட்டு முடிந்ததும் இதை ஒரு முழு வெற்றிப் பாடலாக மாற்ற தங்களுக்கு ஒரு சரியான பாடகர் தேவை என்று அவர் கூறினார். மிக விரைவாக நான் யேசுதாஸ் பெயரைச் சொன்னேன். ஆனால், அவரோ தலையை வேண்டாம் என்பது போல ஆட்டி, என்னைப் பாடுமாறு கூறினார்.

நிகழ்த்திவிட முடியாத மேஜிக்

நான் அதற்குத் தயாராக இல்லை. அதிலிருந்து தப்பிக்கவே முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால், நான்தான் அந்தப் பாடலைப் பாட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அந்த நம்பிக்கையை எனக்குள்ளும் விதைத்தார். பின்னணி இசைக்கு அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது குறித்து எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என் மனதில் மார்கழி மட்டுமே இன்னும் இருந்தது. ஆனால், அவர் அத்துடன் டிரம்ஸைச் சேர்த்து அதை நவீனமாக மாற்றினார். மேலும் அது மட்டுமே அந்தச் சூழலுக்குப் பொருந்திப் போகும் பாடலாக இருந்தது. அவர் பிரசாத் ஸ்டுடியாவில் இருந்து வெளியே வந்து தன் வேட்டியைக் கட்டியபடியே மிகவும் உற்சாகமாக இந்தப் பாடல் கண்டிப்பாக ஹிட் அடிக்கப் போகிறது என்றார். அது எல்லோராலும் நிகழ்த்திவிட முடியாத ஒரு மேஜிக். நான், பஞ்சு, இளையராஜா, சிங்கீதம் உள்ளிட்டோரால் அதை நிகழ்த்த முடிந்தது. காரணம் நாங்க ஒரு சமூகமாக இருந்தோம். நுட்பங்களால் மட்டுமே ஒரு படத்தை உருவாக்கிவிட இயலாது. ஜனநாயகம், அன்பு, விடாமுயற்சி ஆகியவை ஒரு படத்தை உருவாக்க தேவை என்று நாங்கள் நம்பினோம். ஆரம்பத்தில் பஞ்சு இதிலிருந்து விலகியே இருந்தார். அவரே ஒரு கதாசிரியர்தான் என்பதால் எந்த ஒரு விவாதத்திலும் நாங்கள் அவரை ஈடுபடுத்தவில்லை என்று அதிருப்தியில் இருந்தார். ஆனால், அது தன்னுடைய ஸ்டைல் அல்ல என்பதையும், நான் வேறொரு திசையில் சென்று கொண்டிருக்கிறேன் என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.

பாட்டியாக நடிக்க விரும்பிய நாகேஷ்

இன்னொரு சுவாரஸ்யமான கதை என்னவென்றால், எஸ்.என்.லட்சுமியை வைத்து நாங்கள் எடுத்த ஒரு காட்சியைப் பார்த்த நாகேஷ் தானே அந்தக் கதாபாத்திரலும் நடிப்பேன் என்று எங்களிடம் சண்டை போட்டார். நீ 4 பாத்திரங்களில் நடிக்கும்போது என்னால் முடியாதா என்பதுதான் அவருடைய வாதம். எஸ்.என்.லட்சுமியை நீக்கிவிட்டு அந்தப் பாத்திரத்தையும் தனக்கே கொடுக்குமாறு கூறினார். இது எஸ்.என்.லட்சுமிக்கும் தெரியும். இந்தச் சம்பவத்தை 'அவ்வை சண்முகி' படத்தின்போது மீண்டும் நினைவு கூர்ந்து அப்போது நான் கிழவியாக நடிக்க விரும்பினேன், இப்போது நீ நடிக்கிறாய் என்று கூறினார். மூர்த்தி சாரும் சந்தேகம் மிகுந்து ஒரு முட்டாள் தந்தையாக தனது பாத்திரத்தை மேம்படுத்தி தனது திறமையின் மூலம் அதை மறக்க முடியாததாக மாற்றியிருந்தார்.

உதவி இயக்குநாக மாறிய குஷ்பு

படத்தின் இறுதிக்காட்சியை நெருங்கும் நேரத்தில், தொடர்ச்சியாக முன் தயாரிப்பு இல்லாத மாற்றங்களைச் செய்து கொண்டிருந்தோம், மேலும் குஷ்பு தனது நட்சத்திர அந்தஸ்தையெல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு இறங்கி வந்து என்னுடன் ஒரு உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இப்போது என்னுடைய தந்திரங்களுக்கு வருகிறேன். க்ளைமாக்ஸ் காட்சியில் குஷ்பு அணிந்திருக்கும் ஒரு பெல்ட் வழக்கத்துக்கு மாறானது. பொதுவாக குஷ்பு போன்ற உடலமைப்பு கொண்டவர்களுக்கு அது வழங்கப்படுவதில்லை. எனினும் எனக்கு அது தேவைப்பட்டது. நான் அவரிடம் இதைச் சொன்னதும் அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். அதேபோன்ற 6 பெல்ட்கள் எனக்கு வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அவரும், லைன் ப்ரொட்யூசரான சுப்புவும் எனக்காக அவற்றைச் சரியான நேரத்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

அதை நான் வலியுறுத்தக் காரணம், கட்டிடம் சாய்ந்து கொண்டிருக்கும்போது குஷ்புவிடம் சுப்ரமணியன் ராஜுவும், மதனும் ஒரே நேரத்தில் பேச வேண்டும். கேள்வி என்னவென்றால் அவர்கள் அருகருகே இருக்கும்போது நாம் எவ்வாறு ஒரு பக்கம் மறைப்பது?. அப்போது அதை ரோடோஸ்கோப் செய்ய எங்களிடம் சிஜி இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

‘சீ சா’ வடிவ செட்

ஏன் சதுர வடிவில் ஒரு செட் போட்டு அதன் இரு மனிதர்களால இழுக்கமுடியும் வகையில் பக்கமும் சரிவுகளைச் ஏற்படுத்தக் கூடாது என்று பரிந்துரை செய்தேன். அதன் மூலம் நாம் தேவைப்படும் இடத்தில் அதை ஒரே இடத்தில் அசையாமல் இருக்குமாறு செய்யமுடியும் என்று கூறினேன். அடுத்த சவாலாக ‘மேலும் கீழும் அசையும்படி ஒரு முழு செட்டை எப்படி உருவாக்குவது?’ என்ற கேள்வி எழுந்தது. ஏராளமான பொறியியல் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. அதன் பிறகு என் அப்பாவின் மேசையில் இருக்கும் ஒரு ப்ளாட்டரைப் பற்றிச் சொன்னேன். அது ‘சீ சா’ போன்ற அமைப்பைக் கொண்டது.

பாரம்பரிய கலை இயக்குநரான ரங்கா பகேடிக்கு இந்த நுட்பங்கள் யாவும் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. நான் என்ன கற்பனை செய்திருந்தேனோ அதே போன்ற ஒரு செட்டை அவர் வடிவமைத்துக் கொடுத்தார்.

இதுதான் சுவாரஸ்யமான பகுதி, படத்தின் பெரும்பாலான காட்சிகள் பான் (pan) முறையில் வேகம் கூட்டப்பட்டு எடுக்கப்பட்டதால் அவை மாஸ்கிங் முறையில் எடுக்கப்படவில்லை. ஒரு நடன உதவியாளராக அனுபவம் இருந்ததால் அதை நான் சிறப்பாகச் செய்து முடித்திருந்தேன். அதை நீங்கள் 'மன்மதன் அம்பு' படத்திலும் பார்த்திருக்கலாம். என்னுடைய குருநாதரான பி.எஸ். லோகநாத்தும் ஆடாமல் பான் காட்சிகளை எடுப்பதில் வல்லவர். காட்சியின் தொடர்ச்சி தெரிந்திருந்தால் நமக்குத் தேவையான வேகத்தில் பான் முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நாங்கள் ஸ்பீடு பான் முறையைப் பயன்படுத்தியிருந்தோம். நீங்கள் கூர்ந்து கவனித்தால் அவை கட் ஷாட்கள் என்பது தெரியும். ஆனால், அவை பார்ப்பதற்கு சிங்கிள் ஷாட் போல எடுக்கப்பட்டிருக்கும்.

இதுபோன்ற தந்திரங்களை அடுத்த தலைமுறை இயக்குநர்களால் கூகுளின் உதவியுடன் செய்து முடிக்க முடியும். ஆனால், அதில் கூட்டு மனசாட்சியும், கூட்டு ஞானமும் இருக்காது. ஆனால், உங்களுக்குக் கிடைக்காது ஒன்று, நான் பெருமைப்படும் விஷயங்களில் ஒன்று, அதைத் தற்பெருமை என்றும் சொல்லலாம், அது இதுபோன்ற மிகச்சிறந்த திறமையாளர்களை ஒன்றிணைப்பது. அவர்களை ஒன்றிணைக்கத் தேவை அதிகாரம் அல்ல. பணிவு மட்டுமே. நான் அவர்களிடம் கெஞ்சுவேன், கடன் வாங்குவேன். ஆனால், திருட மாட்டேன். காட்சிகளை எடுத்து முடிக்க செட்டில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று நான் பேசுவேன். அதுதான் என்னுடைய மிகப்பெரிய பலம். நானும் சிங்கீதமும் இணைந்து போராடி, சகாக்களாக இணைந்து பல படங்களை எடுத்து முடித்துள்ளோம். அந்த இணைந்திருத்தலைத்தான் ஒரு இயக்குநர் கற்றுக் கொள்ளவேண்டும். அது பிஎச்டி பட்டங்களால் வருவதல்ல. அது கலையை நேசிக்கக் கூடிய ஒரே எண்ணங்களை கொண்ட மனிதர்களிடமிருந்து வருவது. நாங்கள் பி.சி.ஸ்ரீராமுடன் இணையமுடியவில்லை என்றாலும் எங்கள் கேமராமேன் பி.சி.கவுரிசங்கர் அற்புதமான முறையில் பணியாற்றியிருந்தார். ஏற்கெனவே ‘புஷ்பக்’ படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றியிருந்தோம். எங்களுடைய எண்ண ஓட்டங்களை ஒருவருக்கு ஒருவர் புரிந்திருந்ததால் எந்தவிதப் பதற்றமும் இன்றி அவரால் நிதானமாகப் பணியாற்ற முடிந்தது. மாஸ்கிங் பணிகளுக்காக நாங்கள் லாலை அழைத்து வந்தொம். ஒரு சில ஒளிப்பதிவாளர்களுக்கு மட்டுமே மாஸ்கிங் கலை தெரியும். எங்கள் ஒளிப்பதிவாளர்தான் அதில் நிபுணத்துவம் பெறவில்லை என்பதை அவராகவே ஒப்புக் கொண்டார். நான் லாலின் தந்தையுடன் பணியாற்றியுள்ளேன். காட்சிகள் எடுக்கப்படும்போது மாஸ்க்குகளை வெட்டுவதில் அவர் வல்லவர்.

முகத்தைக் கிழித்த கண்ணாடித் துண்டு

எங்கள் எடிட்டர்கள் குறைவான நேரத்தில் மிகப்பெரிய பணியைச் செய்து முடித்தார்கள். முந்தைய படங்களில் ஏற்பட்டதைப் போல எனக்கு விபத்துகள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் விக்ரம் தர்மா மிகுந்த கவனத்துடன் இருந்தார். எனவே, பாத்ரூமில் கண்ணாடி உடைக்கும் காட்சியில் நடிக்க அவர் என்னை அனுமதிக்கவில்லை. முரண் என்னவென்றால் எனக்கு இன்னொரு இடர் காத்திருந்தது. என்னுடைய டூப் அந்தக் காட்சியில் நடித்து முடிக்கும்போது, அதைப் பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய முகத்தில் ஒரு கண்ணாடி துண்டு கிழித்துவிட்டது. நான் அவரைப் பார்த்து ‘இதற்கு நீங்கள் என்னையே செய்யவிட்டிருக்கலாம்’ என்று என் மனதில் கூறியது அவருக்குப் புரிந்திருக்கும். 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் எடுத்த பயிற்சியால் இப்படத்தில் எந்தவித அழுத்தங்களும் இன்றி நாங்கள் பணியாற்றினோம்.

‘மைக்கேல் மதன காமராஜ’னின் மேஜிக்

எங்களுடைய மிகச்சிறந்த காமெடி படங்களில் ஒன்றான ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ எங்களுடைய மிகச்சிறந்த குழந்தையாக இருக்கவில்லை. அதற்குப் பிறகு நாங்கள் சேர்ந்து படம் எடுக்கவில்லை என்றாலும் அது எங்களுக்கு ஒரு நல்ல க்ளைமாக்ஸாக அமைந்தது. அதுதான் மேஜிக். சினிமாவில் நீங்கள் மேஜிக்கைக் கொண்டு வரலாம். இந்தக் கலையில் இருக்குறம் ஜனநாயகம்தான் மாணவர்கள் தேடிப் படிக்க வேண்டிய பாடம். நீங்கள் வான்காவாக உங்களை ஓவியங்கள் தீட்டி அதனால் விரக்தியடைந்து உங்கள் காதுகளை வெட்டிக்கொள்ள முடியாது. நீங்கள் உங்கள் காதுகளை வைத்துக்கொள்ள வேண்டும், புயல் சுழன்று அடித்தாலும் நீங்கள் உங்களை ஓவியத்தைத் தீட்டி முடிக்க வேண்டும். அதுதான் ‘மைக்கேல் மதன காமராஜ’னின் மேஜிக்.

இயக்குநராக விரும்பிய நாசர் மாஸ்கிங் குறித்து தெரிந்துகொள்ள விரும்பியதால் அவரும் இப்படத்தில் இணைந்தார். என்னுடைய குரு அனந்து இப்படத்தில் நடிக்க விரும்பியதால் நாகேஷ் உடன் ஒரு காட்சியில் நடித்தார். கிரேஸி மோகன் இப்படத்துக்கு ஒரு மிகச்சிறந்த உறுப்பினராக எங்களுடன் இணைந்தார். என்னை விட மூத்தவராக இருந்தாலும் என்னுடைய மற்றொரு குழந்தை டைப்பிஸ்ட் கோபி மற்றும் உசிலமணி அனைத்திலும் பங்கேற்க ஆர்வமாக இருந்தனர். ஒட்டுமொத்தப் படக்குழுவிலும் வேறு யாருடைய பெயரை நான் விட்டிருந்தாலும் அவர்களும் இந்த மேஜிக்கின் ஒரு அங்கம்தான்.

நாகேஷ் - மனோரமாவின் ஈகோ

இந்தத் திறமையாளர்களை நாங்கள் எவ்வாறு ஒன்றிணைத்தோம் என்பது மிக முக்கியமானது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஈகோ உள்ளது. அந்த நேரத்தில் நாகேஷ் மற்றும் மனோரமா இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தனர். என் மீது அவர்கள் வைத்திருந்த அன்பினாலும், என்பால் கொண்ட பிணைப்பினாலும் அவர்கள் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டனர். தமிழ் நகைச்சுவையில் அவர்கள் இருவரையும்தான் நான் என் தாய் தந்தையாகப் பார்க்கிறேன். எனவே நான் மனோரமாவிடம் சென்று அவருடைய ஈகோவைப் போக்கும் விதமாக அவரை 'சரஸ்வதி சபதம்' படத்தைப் பார்க்கச் சொன்னேன். அதில் நாகேஷ் தனது சக நடிகர்களைத் துடைத்தெறியும் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விட்டிருக்க மாட்டார் என்று கூறினேன். மேலும் அவர் நம்மை நடிக்கவிட்டு அதை வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருப்பார். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் அவரைப் பிடிக்கும் என்று கூறினேன். இதே கதையை சென்று நாகேஷிடமும் கூறி அவரையும் சம்மதிக்க வைத்தேன். இவை நான் எதிர்கொண்ட சவால்கள்.

நாயகிகளுக்கு அப்போது உச்சத்தில் இருந்த குஷ்புவையும், மலையாளத்திலும் பிரபலமாக இருந்தவரும், பாக்யராஜ் அறிமுகப்படுத்திய ஹீரோயினுமான ஊர்வசியையும், அவர்களுடன் ரூபிணியையும் தேர்வு செய்தோம். மைக்கேலை சிங்கிளாகவே விட்டுவிட்டோம். ஆனால். 'அபூர்வ சகோதரர்கள்' படத்திலேயே நாகேஷ் மனோரமா இருவரும் அனைத்து சோதனைகளையும் கடந்து அதன் முடிவையும் பார்த்துவிட்டதால், அவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ரத்னா ஸ்டுடியோவில் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்படும்போது மனோரமா ஆறு மணி நேரத்துக்கும் மேலாக எந்தவொரு சலனமும் இல்லாமல் படப்பிடிப்பு அரங்குக்கு வெளியே காத்திருப்பார். மேலும் என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்பதற்காக யாரையும் உள்ளே அனுமதிக்கவும் மாட்டார்.

ஊர்வசி

என்னைப் பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை உருவாக்கும் முறை, நுட்பங்கள் அனைத்துமே இப்போது கூகுளில் கிடைக்கின்றன. நீங்கள் அவற்றைத் தேடி அலசி ஆராயலாம். ஆனால், நாங்கள் வெறுமனே மனித வளத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம். மலையாளியான ஊர்வசியால் பாலக்காடு வட்டார மொழியை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரால் சரளமான மலையாளமும், தமிழும் பேசமுடியும் என்றாலும் அவரை இரண்டுக்கும் மத்தியில் பேசவைப்பது சுலபமாக இல்லை. ஆரம்பத்தில் படத்திற்கு டப்பிங் பேச மறுத்தார். நான் அவரை வலியுறுத்தி டப்பிங்கில் ஒவ்வொரு நாளும் அவருடன் அமர்ந்தேன். காரணம் அவரால் முடியும் என்று நான் நம்பினேன். அது உண்மையாகவும் ஆனது. எங்களுடைய அடுத்த படமான 'மகளிர் மட்டும்' படத்தின் நாயகியாகவும் ஆனார்.

படப்பிடிக்கு முந்தைய நாள் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு வீட்டிற்கு அவரை ஒத்திகைக்கு அழைத்திருந்தேன். அங்கு நான், இயக்குநர், உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர் ஆகியோர் இருந்தோம். இப்படித்தான் திருப்பு மற்றும் காமேஷ்வரன் கதாபாத்திரங்கள் உருவாகின. க்ளைமாக்ஸில் நிகழ்ந்த மேஜிக் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை. மாறாக இங்கு நிகழ்ந்த மேஜிக்தான் என்னை ஆச்சர்யப்படுத்தியது. சில செட்களை நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இந்த வீடு தொடர்பாக காட்சி என் சமஸ்கிருத ஆசிரியருடைய வீட்டில் எடுக்கப்பட்டது. நான் இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அவருடைய மகன் செய்தி வாசிப்பாளர் வரதராஜன். பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியர்கள் என்றால் எங்களுக்கு பயம். அவர்கள் குறித்து கிண்டலும் செய்திருக்கிறோம்.

முரண் என்னவென்றால், சில வருடங்களுக்குப் பிறகு அவருடைய வீட்டிலேயே படப்பிடிப்பு நடத்தும் ஏற்பட்டதுதான். ஒத்திகையின்போது அங்கே ஒரு எலிப்பொறி இருப்பதைக் கண்டு அதையும் கதையில் சேர்த்துவிட்டேன். மேலும் அந்தக் காட்சியில் நான் திறக்கும் அலமாரியும் ஒத்திகையின்போது நான் பார்த்து அதன் பிறகு கதையில் சேர்த்ததே. நான் ஸ்கூட்டலிருந்து விழும் இன்னொரு காட்சியையும் நான் சேர்த்துக் கொண்டேன். அதில் யாரோ திருப்பு.. திருப்பு என்று கூப்பிட்டதால் நான் கீழே விழுந்துவிடுவேன். அந்தக் காட்சியின் போது ஒட்டுமொத்தப் படக்குழுவும் சிரிப்பலையில் அதிர்ந்தது. ஒரே மனிதன் நான்கு முறை திரையில் தோன்றுவதற்கு மாறாக திரைப்படங்கள் செய்யும் மேஜிக் இது. மேலும் இது நான், கிரேஸி மோகன், சிங்கீதம், இளையராஜா ஆகியோரது மேஜிக்.

மொழிபெயர்ப்பு: சல்மான்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x