இது சுயாதீன இசையின் பொற்காலம் - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

இது சுயாதீன இசையின் பொற்காலம் - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
Updated on
1 min read

இது சுயாதீன இசையின் பொற்காலம் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்

தமிழில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன். 2012ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டக்கத்தி’ படம் மூலம் இசைமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘பீட்சா’, ‘ஜிகிர்தண்டா’, ‘சூது கவ்வும்’, ‘கபாலி’, ‘காலா’ என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு அவரது இசையில் வெளியான ‘கர்ணன்’ மற்றும் ‘ஜகமே தந்திரம்’ ஆகிய இரு படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் வரவேற்பை பெற்றன. சமீபத்தில் சந்தோஷ் நாராயணின் இசையில் அவரது மகள் தீ பாடிய ‘எஞ்சாய் எஞ்சாமி’ ஆல்பம் பாடல் உலக அளவில் பிரபலமானது.

இந்நிலையில் இது சுயாதீன இசையின் பொற்காலம் என சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

சுயாதீன இசை தமிழில் பெரிய வரவேற்பை பெறத் தொடங்கியிருக்கிறது. அது ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் மூலம் எங்களுக்கு நிகழ்ந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். அப்பாடலுக்கு உலக அளவில் கிடைத்திருக்கும் அங்கீகாரம் இந்திய இசைக் கலைஞர்களுக்கு கதவுகளை திறந்திருக்கிறது. இந்திய சுயாதீன இசை உலகம் முழுவதும் பெருமளவில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இதை சுயாதீன இசையின் பொற்காலம் என்று சொல்லலாம்.

திரை இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் என்னை நான் சுயாதீன இசையமைப்பாளர் என்றே அழைத்துக் கொள்கிறேன். ஏனெனில் திரைப்படங்களிலும் பணிபுரியும்போது கூட யாரும் எனக்கு அழுத்தம் கொடுப்பதில்லை. சுயாதீனமாக பணியாற்ற நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

இவ்வாறு சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in