Published : 30 Jun 2021 04:40 PM
Last Updated : 30 Jun 2021 04:40 PM

ரஜினி தரப்பிடமிருந்து கஸ்தூரிக்கு விளக்கமா?- மக்கள் தொடர்பாளர் மறுப்பு

சென்னை

கஸ்தூரிக்கு ரஜினி தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்லாமல் இருந்தார் ரஜினி. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால் மத்திய அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார் ரஜினி. அமெரிக்காவில் மாயோ மருத்துவமனையிலிருந்து ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் நடந்துவரும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், அங்கிருந்து வருபவர்களுக்குத் தடை விதித்துள்ளது அமெரிக்கா. அதையும் மீறி எப்படிச் சிறப்பு அனுமதி பெற்று ரஜினி செல்லலாம் என்று கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவுகள் இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள், கஸ்தூரியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள். அடுத்த சில தினங்களில் மீண்டும் தனது ட்விட்டர் பதிவில், "அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மனக் கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி, நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புதுப்பொலிவுடன் 'தலைவரை' வரவேற்கத் தயாராகட்டும் தமிழகம்!" என்று குறிப்பிட்டார் கஸ்தூரி.

இந்தப் பதிவை முன்வைத்துப் பலரும் ரஜினி தரப்பிலிருந்து கஸ்தூரிக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்று செய்திகளை வெளியிட்டனர்.

தற்போது இது தொடர்பாக ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ், கஸ்தூரியின் பதிவைக் குறிப்பிட்டு, "தலைவரோ, தலைவர் குடும்பத்திலிருந்தோ யாரும் பேசவில்லை. எந்தவிதமான விளக்கமும் கொடுக்கவில்லை என்பதுதான் நிஜம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x