'லவ் பண்ணா உட்றனும்' இரண்டாவது பாகம்: விக்னேஷ் சிவன் திட்டம்
தனது 'லவ் பண்ணா உட்றனும்' குறும்படத்தின் இரண்டாவது பாகத்தைத் திட்டமிட்டு வருவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 'பாவக் கதைகள்' என்கிற ஆந்தாலஜி (குறும்படங்களின் தொகுப்பு) திரைப்படம் வெளியானது. இதில் கவுதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா ஆகியோருடன் சேர்ந்து விக்னேஷ் சிவனும் ஒரு குறும்படத்தை இயக்கியிருந்தார். இதில் அஞ்சலி இரட்டை வேடங்களிலும், கல்கி கேக்லா, பதம் குமார் உள்ளிட்டோரும் நடித்தனர்.
சாதி ஆணவக் கொலைகளை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனின் 'லவ் பண்ணா உட்றனும்' பகுதி மட்டுமே நகைச்சுவை சேர்த்து எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார். இதில் ஒரு ரசிகர் இந்தக் குறும்படம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
''ஏன் உங்கள் குறும்படத்தில் தந்தை கதாபாத்திரத்தைத் தப்பிக்க வைத்தீர்கள்? அவரும் பல பேரைக் கொன்ற கொலைகாரர் தானே'' என்று ரசிகர் கேட்டதற்கு, ''ஆம். தார்மீக ரீதியாக அவர் செய்தது தவறுதான். அவரது மனசாட்சியைத் தவிர அவற்றுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. எனவே, அவரது தவறான முடிவுக்கு அவரே தண்டனை கொடுத்துக் கொண்டார். தனது இன்னொரு மகளிடம் மன்னிப்பு கேட்டு தனது மீதி வாழ்க்கையை அவருடனேயே கழித்தார்'' என்று விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.
மேலும், உங்களிடமிருந்து இன்னொரு குறும்படத்தை எப்போது எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கு, ''லவ் பண்ணா உட்றனும் இரண்டாவது பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளேன். அதற்காகக் காத்திருக்கிறேன்'' என்று பதில் கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
