பெண் இயக்குநர்களுக்கு செல்வராகவன் அறிவுரை

பெண் இயக்குநர்களுக்கு செல்வராகவன் அறிவுரை
Updated on
1 min read

பெண் இயக்குநர்கள் கட்டுப்பாடுகளை மீறி சுதந்திரமாக எல்லாவிதமான படங்களையும் எடுக்க வேண்டும் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்தார்.

புதுமுகம் பாலகிருஷ்ணன், வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடிக்க, கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வரும் படம் 'மாலை நேரத்து மயக்கம்'. '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு படத்தொகுப்பு செய்த கோலா பாஸ்கர் இப்படத்தை தயாரித்து வருகிறார். செல்வராகவன் இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

ஜனவரி 1ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அச்சந்திப்பில் இயக்குநர் செல்வராகவன் பேசியது, “நானும், தனுஷும் 15 வருடங்களுக்கு முன்பு தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகி இப்போது தான் நல்ல இடத்துக்கு வந்துள்ளோம். அதுபோல் என் மனைவி கீதாஞ்சலியும் ‘மாலை நேரத்து மயக்கம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட மேலும் பல புதியவர்களும் இதில் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

எனது மனைவி இந்த படத்தை இயக்க முன் வந்ததும் நான் முதலில் தயங்கினேன். ஆனாலும், எனக்கு நம்பிக்கை அளித்து படத்தை இயக்கினார். படம் முடிவடைந்து முதல் பிரதி பார்த்ததும் எனக்கு பிடித்து விட்டது. நிஜமாகவே இந்த படம் எனக்கே புதுமையாக இருந்தது.

நான் ஆண் இயக்குநராக இருந்து பெண்களின் உணர்வுகளை பற்றிய படத்தை இயக்கினேன். கீதாஞ்சலி பெண் இயக்குநராக இருந்து ஆண்களை பற்றிய படத்தை இயக்கி உள்ளார். பொதுவாக பெண் இயக்குநர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.

பெண் இயக்குநர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் சம்பந்தமான கதைகளைத்தான் படமாக்க வேண்டும் என்ற நிலைமை இருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் இதுபோன்ற பாரபட்சம் கிடையாது. பல்வேறு கதைக்களங்கள் கொண்ட படங்களை பெண்கள் இயக்கி இருக்கிறார்கள். அவர்களை போல் இங்குள்ள பெண் இயக்குநர்களும் கட்டுப்பாடுகளை மீறி சுதந்திரமாக எல்லாவிதமான படங்களையும் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in