ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய ஏமி ஜாக்சனுக்கு எதிர்ப்பு

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய ஏமி ஜாக்சனுக்கு எதிர்ப்பு
Updated on
1 min read

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய ஏமி ஜாக்சனுக்கு தமிழர் முன்னேற்றப் படை கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

பெடா (PETA) விலங்குகள் நல அமைப்பு, ஜல்லிக்கட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கி, நடத்தி வருகிறது. அந்த கையெழுத்து இயக்கத்தில் வித்யா பாலன், பிபாஷா பாசு உள்ளிட்ட நடிகைகள், விராட் கோலி முதலான கிரிக்கெட் நட்சத்திரங்கள் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த கையெழுத்து இயக்கத்தில் நடிகை ஏமி ஜாக்சனும் இணைந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பெடா கையெழுத்து இயக்கத்தின் இணைப்பை வெளியிட்டு, இதற்கு ஆதரவு தர வேண்டும் என்று பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஏமி ஜாக்சனின் இந்த முடிவுக்கு தமிழர் முன்னேற்றப் படை கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், "'எந்திரன்-2' படத்தில் நடிக்கும் கதாநாயகி ஏமிஜாக்சனை படத்தில் இருந்து நீக்கியதாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் வரும் திங்கட்கிழமை (21-12-15) அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் முன்பு முற்றுகை போராட்டம், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் வீடுகள் முன் முற்றுகை போராட்டமாக இது மாறும். 'எந்திரன்-2' படப்பிடிப்பு இடங்களில் எல்லாம் தமிழர் முன்னேற்றப் படை ஆர்ப்பாட்டம் செய்யும்

நடிகை ஏமிஜாக்சன் 'எந்திரன்-2' படப்பிடிப்புக்காக தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.அவரின் ட்விட்டர் பக்கத்திலும் அதை வலியுறுத்தியுள்ளார்.

எங்கள் தமிழ் மண்ணில் பிழைப்புக்காக வரும் நடிகர், நடிகைகள் எல்லாம் பணம் சம்பாதித்தது போக எங்கள் பண்பாட்டிலும் மூக்கை நுழைப்பதை இனி எங்கள் காலத்தில் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in