அமெரிக்காவில் சிகிச்சை, ஓய்வு: தனி விமானத்தில் பறக்கும் ரஜினி

அமெரிக்காவில் சிகிச்சை, ஓய்வு: தனி விமானத்தில் பறக்கும் ரஜினி
Updated on
1 min read

அமெரிக்காவில் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காகத் தனி விமானத்தில் செல்லவுள்ளார் ரஜினி.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமானார். அதற்குப் பின்பே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தொடர்ச்சியாகப் படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்று வருவார்.

தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தார். அமெரிக்காவில் கரோனா தொற்று வெகுவாகக் குறைந்துவிட்டதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவுக்குப் பயணிக்கவுள்ளார் ரஜினி.

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா. இதனால், தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்குப் பயணிக்கவுள்ளார் ரஜினி. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். மத்திய அரசும் அனுமதி வழங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஜூன் 20-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார் ரஜினி. இதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ரஜினியுடன் அவருடைய குடும்பத்திலிருந்து யார் செல்லவுள்ளார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. யாரேனும் ஒருவர் மட்டும் செல்வார் எனக் கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் ஹாலிவுட் படத்துக்கான படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ். அவரோடு குடும்பத்தினரும் இருக்கிறார்கள். ஆகையால், ரஜினி அமெரிக்காவுக்கு வந்தவுடன் மகள் ஐஸ்வர்யா தனுஷும் இணையவுள்ளார்.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டுதான் ரஜினி இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார். அதற்குப் பிறகே 'அண்ணாத்த' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in