நண்பர்களுக்காக எப்போதும் இருப்பவர் விஜய்: மாளவிகா மோகனன்

நண்பர்களுக்காக எப்போதும் இருப்பவர் விஜய்: மாளவிகா மோகனன்
Updated on
1 min read

நண்பர்களுக்காக எப்போதும் இருப்பவர் விஜய் என்று மாளவிகா மோகனன் அளித்துள்ள பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். அவர் தமிழில் நாயகியாக அறிமுகமான முதல் படமாக 'மாஸ்டர்' அமைந்திருந்தது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடித்ததின் மூலம் விஜய்க்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவராக மாறியுள்ளார் மாளவிகா மோகனன். விஜய்யுடனான நட்பு குறித்து மாளவிகா மோகனன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"விஜய் அவர்கள் நண்பர்களுக்காக எப்போதும் இருப்பவர். அவரது நட்பின் அளவை நம்பவே முடியாது. எப்போது பேச வேண்டுமானாலும் அவரை அழைக்கலாம். அவர் மொபைலை எடுப்பார். உதவி வேண்டுமென்றால் செய்வார். என்னிடம் மட்டுமல்ல, அவரது எல்லா நண்பர்களிடமும் அவர் அப்படித்தான் நடந்து கொள்வார்.

எனது சில நண்பர்கள் அவரை விட அதிக பிஸியாக இருப்பதாகக் காட்டிக்கொள்வார்கள். இவ்வளவு பெரிய நட்சத்திரமே அழைத்தால் பேசுகிறார், உனக்கென்ன என்றெல்லாம் நான் அவர்களிடம் கேட்டிருக்கிறேன்.

நான், விஜய் சார், ஆடை வடிவமைப்பாளர் பல்லவி மூன்று பேரும் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இருக்கிறோம். பல்லவி எப்போது அழைத்தாலும் எடுக்கமாட்டார். உடனே நான் விஜய்யை அழைப்பேன், நாங்கள் இருவரும் சேர்ந்து பல்லவியை அழைத்துக் கிண்டலடிப்போம்.

விஜய் வாயிலிருந்து தவறாக, எதிர்மறையாக ஒரு வார்த்தை வந்தும் நான் கேட்டதில்லை. எப்போதுமே அவ்வளவு உற்சாகமாக, நேர்மறையான சிந்தனையுடன் இருப்பார். மிகவும் இனிமையான நபர்.

என்றாவது படப்பிடிப்புக்குத் தயாரான பிறகு அன்றைய நாளுக்கான படப்பிடிப்பு ரத்தானால் நாங்கள் புலம்புவோம். இதற்காகவா இவ்வளவு சீக்கிரம் எழுந்தோம் என்றெல்லாம் பேசுவோம். ஆனால் அதைக்கூட விஜய் எளிதாகவே எடுத்துக்கொள்வார். பரவாயில்லை, இப்படி நடப்பது சகஜம் தான் என்று அதைக் கடந்துவிடுவார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது"

இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in