

அஜித்தைச் சந்தித்த பின் நடந்த மாற்றம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இது இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக் ஆகும்.
இந்தப் படத்தின் மூலமாகத் தான் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகராகவும் அறிமுகமானார். தீவிரமான அஜித் ரசிகரான இவர், அஜித்துடன் நடித்த அனுபவங்களைப் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். தற்போது இயக்குநராக எப்படியிருந்தேன், 'நேர்கொண்ட பார்வை' படத்துக்காக எப்படி மாறினேன் என்ற புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், ரசிகர் ஒருவர், "கூடிய விரைவில் தல அவர்களை ஒரு அற்புதமான கதையுடன் சந்தியுங்கள். ஒரு தல ரசிகர் தலையை இயக்குவதைக் காண விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிவிட்டு இருப்பதாவது:
"'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பின் போது நான் என்னுடைய 'காதலைத் தேடி நித்யானந்தா' மற்றும் 'பஹீரா' ஆகிய 2 படங்களையும் எழுதி முடித்துவிட்டேன்.. அவரை சந்தித்த பின் என்னுடைய எண்ண ஓட்டம் நிறைய மாறிவிட்டது. இதன் பிறகு என்னுடைய கதை மற்றும் பட தேர்வு ஒரு சரியான தளத்தில் இருக்கும்"
இவ்வாறு ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பஹீரா' படத்தின் நாயகனாக பிரபுதேவா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.