

எனது குரலுக்காகப் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளேன் என்று நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.
'கைதி', 'அந்தகாரம்' மற்றும் 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அர்ஜுன் தாஸ். இவரது கம்பீரமான குரல் பலரையும் கவர்ந்தது. எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் 'கைதி' படத்தின் வசனம் பேசுங்கள் என ரசிகர்கள் கத்துவார்கள். அந்தளவுக்குப் பிரபலமாகிவிட்டார். தற்போது வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் அர்ஜுன் தாஸ்.
தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் அர்ஜுன் தாஸ். அதில் "உங்களுடைய குரலுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளீர்களா?" என்ற கேள்விக்கு அர்ஜுன் தாஸ் கூறியிருப்பதாவது:
"நிறைய முறை நடந்துள்ளது. படங்களுக்காக, டப்பிங் பேசும் போது என பல முறை நடந்துள்ளது. பல படங்களுக்கான தேர்வுக்குச் சொல்லும் போது என் குரலைப் பலரும் விமர்சித்துள்ளார்கள். ஒரு இயக்குநரைச் சந்தித்த போது, இருவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினோம். நீண்ட நேரம் பேசியதால், இந்தப் படத்தில் நாம் நடிக்கவுள்ளோம் என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன்.
ஆனால், எல்லாம் பேசி முடித்தவுடன் "எல்லாமே ஓகே, உங்களுக்கு நெகடிவ்வே குரல் தான். வேறொரு படத்தில் சந்திப்போம்" என்று சொன்னார். அப்போது ரொம்பவே கவலைப்பட்டேன். 'கைதி' வெளியானவுடன் படம் பார்த்துவிட்டு, அதே இயக்குநர் எனக்கு போன் செய்து "உங்களுக்கு ப்ளஸ்ஸே உங்களுடைய குரல் தான்" என்று சொன்னார்"
இவ்வாறு அர்ஜுன் தாஸ் பதிலளித்துள்ளார்.