

'ஜில் ஜங் ஜக்' திரைப்படம் அடுத்தாண்டு தான் வெளியாகும் என்று நடிகரும் தயாரிப்பாளருமான சித்தார்த் அறிவித்திருக்கிறார்.
'ஜில் ஜங் ஜக்' என்று பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடித்து, தயாரித்திருக்கிறார் சித்தார்த். முழுப் படப்பிடிப்பும் முடிந்து, தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தது. இப்படம் நாயகியே இல்லாமல் உருவாகும் 'டார்க்' காமெடி வகை படமாகும்.
இப்படத்தை தீரஜ் வைத்தி என்ற புதுமுக இயக்குநர் இயக்கி இருக்கிறார், விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 14ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லரையும், அதனைத் தொடர்ந்து படத்தின் ஒவ்வொரு பாடலையும் இணையத்தில் வெளியிட்டார்கள். ஏற்கனவே டிசம்பர் 24ம் தேதி 'ஜில் ஜங் ஜக்' வெளியாகும் என்று நடிகர் சித்தார்த் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் கனமழையால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் பல்வேறு படங்கள் தங்களது வெளியீட்டை அடுத்தாண்டுக்கு மாற்றி இருக்கிறார்கள். இதில் 'ஜில் ஜங் ஜக்' படமும் அடங்கும்.
இது தொடர்பாக சித்தார்த், "'ஜில் ஜங் ஜக்' படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. இந்தாண்டு உங்களை திரையரங்கில் சந்திக்க மாட்டோம். முதலில் அனைவரும் நலம் பெறுவோம். அடுத்தாண்டு சந்திக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.