

'சாஹோ' படத்துக்காக உருவாக்கப்பட்ட தீம் இசையின் மூலம் கரோனா நிவாரண நிதி திரட்ட, ஜிப்ரான் புதிய முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஜூன் 14-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது தமிழக அரசு. ஆனால், கரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் எந்தவொரு தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
கரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைச் சரிசெய்ய, முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள். மேலும், சிலர் தங்களுடைய ஓவியங்களை விற்று அதன் மூலம் வரும் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்கள்.
தற்போது, இசையமைப்பாளர் ஜிப்ரான் அவருடைய இசையை ஏலம் விட்டு அதன் மூலம் வரும் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார். இதற்கு வித்தியாசமான முறையைக் கையில் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜிப்ரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
" ’சாஹோ’ படத்தின் நாயகன் தீம் இசையை NFT (Non-Fungible Token) முறையில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முறையில் வரும் தொகையில் 50% தமிழக முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கும், அடுத்த 50% கரோனா தொற்றின் காரணமாக வேலையில்லாமல் அவதிப்படும் இசைக் கலைஞர்களுக்கும் வழங்கப்படும். இதுதான் இந்தியாவின் முதல் முறையாக இசைத்துறையில் செய்யப்பட்ட NFT (Non-Fungible Token) முயற்சி ஆகும்.
இந்த இசைத் தொகுப்பைப் பட இயக்குநரைத் தவிர வேறு யாரும் கேட்டதே இல்லை, இந்த இசை எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அப்போது காட்சியின் தன்மை கருதி, வேறு வகையிலான இசைத் துணுக்கைச் செய்தோம். அதனால் இந்த இசையை எங்குமே வெளியிடவில்லை.
NFT (Non-Fungible Token) வெளியீட்டு முறையின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஏலத்தில் பங்குகொள்ளும் உறுப்பினர்கள், இந்த இசைத்தொகுப்பை உயரிய விலை கொடுத்து வாங்கலாம். இந்த இசைத்தொகுப்பு ஒரே ஒரு நகல் மட்டுமே இருக்கும். அதிக தொகையில் ஏலம் எடுப்பவருக்கு அது சொந்தமாகிவிடும். அவரிடம் மட்டுமே அந்த நகல் இருக்கும். எங்கும் அது வெளிவராது. இந்த ஏலம் 2021 ஜூன் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது".
இவ்வாறு ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.