ஆகஸ்ட்டில் வெளியாகிறது 'நவரசா' ஆந்தாலஜி

ஆகஸ்ட்டில் வெளியாகிறது 'நவரசா' ஆந்தாலஜி
Updated on
1 min read

ஆகஸ்ட் மாதத்தில் 'நவரசா' ஆந்தாலஜி வெளியாவது உறுதியாகியுள்ளது.

கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி வருகிறது. இதில் அனைவருமே சம்பளமின்றிப் பணிபுரிந்து வருகிறார்கள். மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா தயாரித்து வரும் இந்த ஆந்தாலஜி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

'நவரசா' ஆந்தாலஜியில் 9 கதைகளை கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி, ப்ரியதர்ஷன், வஸந்த் உள்ளிட்டோர் இயக்கியுள்ளனர். ஆனால், இறுதியான இயக்குநர்கள் பட்டியல் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முதலில் அறிவிக்கப்பட்ட பட்டியலுக்குப் பிறகு பல்வேறு இயக்குநர்கள் மாறியிருப்பது நினைவுகூரத்தக்கது.

இதில் சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பார்வதி, பிரசன்னா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யார் யார் எந்த இயக்குநரின் படத்தில் நடித்துள்ளார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

இந்த ஆந்தாலஜி எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. சில தினங்களாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனச் செய்திகள் வெளியாகின. ஆனால், எதுவுமே உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள கதைக்கு ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணிபுரிந்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் 'நவரசா' ஆந்தாலஜி என்ற போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் 'நவரசா' ஆந்தாலஜி வெளியாவது உறுதியாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in