மணிரத்னம் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: சுஹாசினி எச்சரிக்கை

மணிரத்னம் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: சுஹாசினி எச்சரிக்கை

Published on

மணிரத்னம் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதாக சுஹாசினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (ஜூன் 2) முன்னணி இயக்குநர் மணிரத்னம் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்குப் பல்வேறு திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார்கள். தற்போது மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' படம் தொடர்பாக ஏதேனும் அப்டேட் இருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், எந்தவொரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை.

முன்னணி இயக்குநர்கள் பலரும் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள். சமீபத்தில் இயக்குநர் பாலா கூட ட்விட்டர் பக்கத்தில் இணைந்தார். இன்று (ஜூன் 2) பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டர் பக்கத்தில் இணைவதாக மணிரத்னம் புகைப்படம் போட்டு, ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது.

இதனைப் பலரும் உண்மை என நம்பி பின்தொடரத் தொடங்கினார்கள். ஆனால், அது போலியான ட்விட்டர் கணக்கு என்பது உறுதியாகியுள்ளது.

இந்தக் கணக்கு தொடர்பாக சுஹாசினி மணிரத்னம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இயக்குநர் மணிரத்னம் இன்று ட்விட்டரில் பக்கம் தொடங்கியிருப்பதாக ஒருவர், @Dir_ ManiRatnam என்கிற பக்கத்திலிருந்து ட்வீட் செய்துள்ளார். இது பொய், இவர் ஒரு போலி நபர். இதைப் பற்றிப் பரப்புங்கள். நன்றி."

இவ்வாறு சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in