’மரகத நாணயம் 2’க்கு முன் மற்றொரு படம்: இயக்குநர் தகவல்

’மரகத நாணயம் 2’க்கு முன் மற்றொரு படம்: இயக்குநர் தகவல்

Published on

'மரகத நாணயம் 2' படத்துக்கு முன்பாக, வேறொரு படம் இயக்கவுள்ளதாக ஏ.ஆர்.கே. சரவணன் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மரகத நாணயம்'. 2017-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தை டில்லி பாபு தயாரித்திருந்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.கே. சரவணன் இன்னும் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை. மேலும், சமீபத்தில் 'மரகத நாணயம் 2' படம் உருவாகவுள்ளதைத் தயாரிப்பாளர் டில்லி பாபு உறுதிப்படுத்தினார். இதனால், பலரும் ஏ.ஆர்.கே. சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், 'மரகத நாணயம் 2' முன்பாக வேறொரு படம் இயக்கவுள்ளதை ஏ.ஆர்.கே. சரவணன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பதிவில் ஏ.ஆர்.கே. சரவணன் கூறியிருப்பதாவது:

" 'மரகத நாணயம்' இரண்டாம் பாகத்திற்கான கதைக்கருவைத் தயாரிப்பாளர் டில்லிபாபு சாரிடம் கூறியிருக்கிறேன். அதற்கு முன்பு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் விரைவில் ஒரு படத்தைத் தொடங்கவுள்ளேன். இவற்றையெல்லாம் விட, கரோனாவின் பிடியிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழ வேண்டும் என்பதே என் வேண்டுதல்கள்”.

இவ்வாறு ஏ.ஆர்.கே. சரவணன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in