

சிம்புவின் 'பீப்' பாடல் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருடன் இளையராஜா வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கனமழையின் போது வெள்ள மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடந்தது.
இதில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் சங்கத் தலைவர் நாசர்ஆகியோர் கலந்து கொண்டு பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களைமீட்டெடுத்து உதவிய தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை இளையராஜா சந்தித்தார். அப்போது சிம்புவின் 'பீப்' பாடல் குறித்து இளையராஜாவிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த இளையராஜா, ''உனக்கு ஏதாவது இருக்கா? அந்தப் பிரச்சினைக்காகவா வந்திருக்கோம். உனக்கு அறிவு இருக்கா? நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு'' என்று எதிர் கேள்விகள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
செய்தியாளருடன் இளையராஜா வாக்குவாதம் செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதற்குப் பிறகு சில தன்னார்வலர்கள் இளையராஜாவை சமாதானம் செய்து வைத்து அனுப்பினர்.