அவர்கள் இணைந்திருந்ததை விட பிரிந்த பின்பு மகிழ்ச்சியாக இருந்தார்கள் - பெற்றோர் குறித்து ஸ்ருதிஹாசன் பகிர்வு
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா. இவர்கள் இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது பெற்றோர் இருவரும் பிரிந்தது குறித்து ஸ்ருதிஹாசன் மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அவர்கள் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் மனம் ஒத்துப் போகாத இருவர் ஒரு சில காரணங்களுக்காக இணைந்திருக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. அவர்கள் தொடர்ந்து அற்புதமான பெற்றோராக இருக்கின்றனர். குறிப்பாக நான் என் அப்பாவுடன் நெருக்கமாக இருக்கிறேன். என் அம்மாவும் எங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறார். இது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
இருவரும் தனித்தன்மை வாய்ந்த அற்புதமான மனிதர்கள். அவர்களுடைய பிரிவு அவர்களுடைய அந்த அழகான தனித்துவத்தை அவர்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிட வில்லை. அவர்கள் பிரியும்போது, நான் மிகவும் சிறிய பெண்ணாக இருந்தேன். அது மிகவும் எளிதாக நடந்தது. அவர்கள் இணைந்திருந்ததை விட பிரிந்தபின்பு மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
