

கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை மக்கள் அனைவரும் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று நடிகர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா 2-வது அலையில் நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 35,000-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த நாளை (மே 24) முதல் ஒரு வாரத்துக்கு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. இதற்காக இன்று ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் காலை முதலே பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கக் குவிந்து வருகிறார்கள். இதனை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக சாடி வருகிறார்கள்.
இந்நிலையில், கரோனா தொற்று தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடிகர்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். கரோனா விழிப்புணர்வு தொடர்பாக நாசர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தக் கரோனா தொற்றுநோய் காரணமாக, நாம் ஒரு கடுமையான, கொடுமையான காலகட்டத்தில் இருக்கிறோம். தமிழக அரசுடன் ஒத்துழைத்து நாம் தான் இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். கரோனா தானாகப் பரவுவதில்லை. ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்குத் தொற்றுகிறது. இந்தச் சங்கிலியை நாம் உடைக்க வேண்டும். இந்தப் பரவலைத் தடுக்க வேண்டும்.
அதற்காகத் தான் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. நாம் அதைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த ஊரடங்கு உத்தரவு, எனக்காக, உங்களுக்காக, நாட்டு மக்களுக்காக. தயவு செய்து, தயவு செய்து, தேவைப்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள்"
இவ்வாறு நாசர் தெரிவித்துள்ளார்.