

கரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பான தடுப்பு நடவடிக்கை இன்னும் மக்களுக்கு சரிவரத் தெரியவில்லை என்று அயலான் படத்தின் இயக்குநர் ரவிக்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் தீவிரம் மிகவும் கடுமையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நாளை (மே 24) முதல் ஒரு வாரத்துக்கு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. இதற்காக இன்று ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் காலை முதலே பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்து வருகிறார்கள். இதனை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.
தமிழகத்தில் குறிப்பாக கோயம்புத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. மேலும், பொதுமக்களும் சரியான முறையில் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பொதுமக்களுக்கு கரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பான தடுப்பு நடவடிக்கைகள் தெரியவில்லை என்று இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
"திருப்பூரில் பெரும்பாலோனோர் அணிந்திருப்பது ஒரே ஒரு துணியிலான பனியன் மாஸ்க். துவைத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வசதியாக அந்த மாஸ்க்கை அணிகிறார்கள். ஆனால் அந்த மாஸ்க் கரோனா வைரஸை துளியும் தடுக்காது. கொடுமை அதையும் தாடைக்கு அணிந்தபடி சுற்றுவதுதான்.
கூட்டமில்லாத ஒரு மளிகை கடையில் நிறுத்தினேன். அவ்வளவு பேரை சந்திக்கும் கடைக்காரர் தாடைக்கு மாஸ்க் அணிந்தபடி சர்வசாதாரணமாக புலங்கிக் கொண்டிருக்கிறார் “அண்ணா மூக்குக்கு போடுங்க” என்று சொன்னதும் சுரத்தையே இல்லாமல் இழுத்துவிட்டுக்கொண்டார்.
ஒரு அக்கா சேலை தலைப்பால் மூக்கை மூடியபடி வந்து நின்றார். சாலையில் எதிர்படும் பலரும் மாஸ்க் விஷயத்தில் ரொம்பவும் கவனக்குறைவாக இருப்பது கவலையாக இருக்கிறது.
ஒரு வைரஸுக்கு எதிரான பாதுகாப்பான தடுப்பு நடவடிக்கை எது என்பது இன்னமும் மக்களுக்குச் சரிவரத் தெரியவில்லை. மாஸ்க் பற்றிய விழிப்புணர்வு இல்லை. தமிழ்நாட்டில் கரோனா பரவலில் திருப்பூர் முதல் ஐந்து இடத்திற்குள் இருக்கிறது முன்னணிக்கு வந்தாலும் ஆச்சரியம் இல்லை. நிலவரம் அப்படி இருக்கிறது"
இவ்வாறு இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.