இயக்குநர் ஷங்கரின் தாயார் மறைவு: திரையுலகினர் இரங்கல்

இயக்குநர் ஷங்கரின் தாயார் மறைவு: திரையுலகினர் இரங்கல்
Updated on
1 min read

செவ்வாய்க்கிழமை மாலை இயக்குநர் ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

'ஜெண்டில்மேன்' திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமாகி இன்று இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படுபவர் இயக்குநர் ஷங்கர். பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயரெடுத்த ஷங்கர் தற்போது 'இந்தியன் 2', ராம் சரண் தேஜா நடிப்பில் பன்மொழிப் படம் ஒன்று, இந்தியில் 'அந்நியன்' ரீமேக் என அடுத்தடுத்த படங்களின் வேலைகளில் முனைப்புடன் உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர் இயக்குநர் ஷங்கர். இவரது தாய் முத்துலட்சுமி, தந்தை சண்முகம். தனது தாயோடு கூடுதல் பிணைப்புடன் இருந்தது குறித்து ஷங்கர் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

சென்னையில் ஷங்கருடன் வசித்து வந்த அவரது தாயார் முத்துலட்சுமி வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை அன்று நடைபெறவுள்ளது. சமூக ஊடகங்களில் அடிக்கடி பதிவிட்டு வரும் ஷங்கர் தனது தாயார் மறைவு குறித்து எதுவும் இதுவரைப் பகிரவில்லை.

இயக்குநர் ஷங்கருக்குத் திரையுலகினர், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in