

கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படம் ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
புதுமுகம் பாலகிருஷ்ணன், வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடிக்க, கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வரும் படம் 'மாலை நேரத்து மயக்கம்'. '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு படத்தொகுப்பு செய்த கோலா பாஸ்கர் இப்படத்தை தயாரித்து வருகிறார். செல்வராகவன் இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இறுதிகட்டப் பணிகள் முடிந்து படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் அளித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து படத்தை வெளியிட சரியான தேதிக்காக காத்திருந்தார்கள். தினமும் 'விரைவில் வெளியீடு' என்று விளம்பரப்படுத்தி வந்தார்கள்.
இந்நிலையில், இன்று 'மாலை நேரத்து மயக்கம்' படக்குழு ஜனவரி 1ம் தேதி இப்படம் வெளியாகும் என்று விளம்பரப்படுத்தி இருக்கிறது. தற்போது படத்தை வெளியிடுவதற்கான திரையரங்க ஒப்பந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.