

தனுஷ் நடித்திருக்கும் 'தங்கமகன்' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.
வேல்ராஜ், தனுஷ் இணைப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'வேலையில்லா பட்டதாரி'. அதே படக்குழு மீண்டும் இணைந்து படம் பண்ண தீர்மானித்தார்கள். இப்படம் 'வேலையில்லா பட்டதாரி 2' என்று தகவல்கள் வெளியானாலும் படக்குழு அதற்கு மறுப்பு தெரிவித்தது.
தனுஷ் உடன் சமந்தா, ஏமி ஜாக்சன், சதீஷ்,ராதிகா, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால், படத்துக்கு பெயர் சூட்டப்படாமல் இருந்தது. இறுதியாக 'தங்கமகன்' என்று தலைப்பிட்டு இருப்பதாக கூறி பர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இறுதிகட்டப் பணிகள் முடிவு பெற்றதைத் தொடர்ந்து, சென்சார் அதிகாரிகளுக்கு படத்தைத் திரையிட்டு காட்டினார்கள். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு 'யு' சான்றிதழ் அளித்தார்கள். அதனைத் தொடர்ந்து தனுஷ் "'தங்கமகன்' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்தார்கள். டிசம்பர் 18ம் தேதி படம் வெளியாகிறது" என்று தெரிவித்தார்.
இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.