அமேசான் ப்ரைமில் 'கர்ணன்'- வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

அமேசான் ப்ரைமில் 'கர்ணன்'- வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் 'கர்ணன்' திரைப்படம் மே 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சனம், வசூல் என இரண்டு விதங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை இந்தப் படம் நிகழ்த்தியது.

சில வாரங்கள் திரையரங்கில் வெற்றிகரமான ஓட்டத்துக்குப் பின் தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரப் பரவலால் திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் 'கர்ணன்' திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் மே 14ஆம் தேதி அன்று 'கர்ணன்' வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட 240 நாடுகளைச் சேர்ந்த அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் 'கர்ணன்' படத்தைப் பார்க்க முடியும்.

"படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாவதில் பெரு மகிழ்ச்சி. எந்தப் படத்தையும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் பார்க்கும் வசதியை ஸ்ட்ரீமிங் தளங்கள் தருவதுதான் அவற்றின் அழகு" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஜூன் மாதம் 18ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in