

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் மற்றும் வாணி போஜன் நடித்திருக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
2018ஆம் ஆண்டு 'காற்றின் மொழி' திரைப்படத்துக்குப் பின் தற்போது எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் 'பொம்மை' என்கிற திரைப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில், தற்போது ராதாமோகன் இயக்கத்தில் இன்னொரு திரைப்படமும் வெளியாகவுள்ளது.
‘மலேஷியா டு அம்னீஷியா’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் வைபவ், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவை கவனித்திருக்கிறார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது.
முழு நீள நகைச்சுவைக் கதையாக எழுதப்பட்டுள்ள இந்தப் படம் ஜீ5 தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. மே 28 அன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வைபவ், வெங்கட் பிரபு நடிப்பில் 'லாக்கப்' திரைப்படமும் ஜீ5 தளத்தில் நேரடியாக வெளியானது நினைவுகூரத்தக்கது.