Published : 09 May 2021 01:59 PM
Last Updated : 09 May 2021 01:59 PM

சந்தோஷமா போய்ட்டு வாங்க: தாத்தாவின் மறைவுக்கு ப்ரியா பவானி சங்கர் நெகிழ்ச்சிப் பகிர்வு

தனது தாத்தாவின் மறைவையொட்டி அவர் குறித்த நினைவுகளை நடிகை ப்ரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ளார்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து கவனம் ஈர்த்து அதன் பின் சின்னத்திரை தொடர்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். 2017ஆம் ஆண்டு மேயாத மான் திரைப்படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பொம்மை, ஹரி இயக்கத்தில் ஒரு படம், இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்துகளைப் பதிவிடும் ப்ரியா, சனிக்கிழமை அன்று தனது தாத்தாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார். அவரது நீண்ட பதிவு ட்விட்டர்வாசிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று பல நூறு பேரால் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவு பின்வருமாறு. (பதிவில் பயன்படுத்தப்பட்ட ஆங்கில வார்த்தைகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன)

தாத்தா!

ஒரு வெற்றிகரமான வியாபாரி. தனி மனுஷனா ஒன்னுமே இல்லாம வாழ்க்கைய ஆரம்பிச்சி 5 பசங்கள அமோகமா படிக்க வச்சி 10 பேரப்‌ பசங்கள்ல 8 பேர டாக்டராக்கி அவங்களையும்‌ டாக்டர்களுக்கு கட்டிக்கொடுத்து தான்‌ உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள்‌ சூழ் உலகத்துல பெருமையா வாழ்ந்தவர்‌.

நான்‌ தாத்தாவுக்கு பிடிச்ச பேத்திலாம்‌ இல்ல. இத்தனைக்கும் எல்லாரவிடவும் நான் கொஞ்சம் வித்தியாசமானவன்னு கூட வச்சிக்கலாம்‌. சின்னதுலேர்ந்தே 'என்னமா இவ்ளோ துஷ்டத்தனம்‌ பண்ணுது இது' வகை நாம. 10வது வரை கோடை விடுமுறை விட்டா நாய்‌ குட்டி மாதிரி எங்க 8 பேரையும்‌ தாத்தா வீட்ல விட்ருவாங்க.

கட்டில்கள்‌, ஊஞ்சல்கள்‌,கைகள்‌,கால்கள்‌,எங்க மண்டைகள்னு உடையாத பொருள் எதுவும்‌ இல்ல. கத்தி குத்து முயற்சி, ஆள்‌ கடத்தல்‌, கொலை முயற்சின்னு சிறார் குற்றங்களும்‌ இதில்‌ அடக்கம்‌. பட்டம்‌, பம்பரம்‌, கிட்டிப்புள்‌, உண்டிகோல்‌ தொடங்கி பரண்‌-ல தொங்கர வரைக்கும்‌ அனைத்தும்‌ கற்றது தாத்தா வீட்ல தான்‌.

ஆனா ராத்திரி தாத்தா வீட்டுக்கு வந்துட்டா முழு ஒழுக்கம் தான். உள்ள வரும்‌ போதே அவரோட முதல்‌ வேலை டிவிய இழுத்து மூடி பூட்டு போடறது தான்‌. அப்போலாம்‌ அந்த கதவு வச்ச டிவி. பெப்ஸி உங்கள் சாய்ஸ் மட்டும்‌ பாத்துக்கறேன்‌ தாத்தான்னு கெஞ்சினாக்கூட விட மாட்டார்‌. இப்படியாக இளமை புதுமை, நீங்கள்‌ கேட்ட பாடல்‌, திரை விமர்சனம்‌, நிம்மதி நிம்மதி உங்கள்‌ சாய்ஸ்‌-னு நாங்க இழந்த நிகழ்ச்சிகள்‌ ஏராளம்‌. எங்க பாட்டி தான்‌ எங்களுக்கு ராக்ஸ்டார். தாத்தா பயப்படற, பேச்ச கேக்கற ஒரே ஆளு பாட்டி தான்‌.

இதெல்லாம்‌ தினமும்‌ நியாபகத்துல இருக்கற விஷயம்‌ இல்ல. நேத்து இறந்து போய்‌ அசையாம இருந்த தாத்தாவ பார்க்கும்போது மூளையின்‌ ஓரத்துல எங்கயோ எப்பயோ புதஞ்சி மறந்துபோன ஓரு கோடி நியாபகம்‌. டிவி சினிமாலாம்‌ பார்க்கவே கூடாதுன்னு சொன்ன தாத்தாவோட, மருத்துவம் படிக்காத ஒரே பேத்தி நான்‌.

போன வாரம்‌ கடைசியா அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, உன்னை உங்க அப்பா தைரியமான பொண்னா வளர்த்துருக்காரு. என்‌ பொண்னை நீ நல்லா பாத்துப்பன்னு தெரியும்‌ சொன்னார்‌. எங்க தாத்தா எங்களுக்கு எந்த சொத்தும்‌ எழுதிட்டுப்‌ போகல, ஆனா என்னோட முதல்‌ சம்பளத்துல 1950ல அன்றைய காசு 24 ரூபாக்கு என்‌ அம்மாக்கு வாங்கின தோடு இது, இனி நீ வச்சுக்கோன்னு கொடுத்தார்‌. நாங்க நினைச்சத விட அதிக மதிப்பான பொருள் இதுதான்.

அவர் எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்திருக்காருனு தோணிச்சு. உங்க அம்மாவோட தோடையும்‌ உங்க பொண்ணையும்‌ மாப்ளையையும்‌ என்‌ உயிர விட பத்திரமா பாத்துப்பேன்‌ தாத்தா. சந்தோஷமா போய்ட்டு வாங்க.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x