

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் பட்ஜெட் 350 கோடி என லைக்கா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சனும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
'2.0' படம் குறித்து லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் கரண் மற்றும் படைப்பாற்றல் குழுத் தலைவர் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் இணைந்து அளித்துள்ள வீடியோ பேட்டியில் படத்தின் பட்ஜெட் மட்டும் 350 கோடியாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். படத்தை விளம்பரப்படுத்த தனியாக செலவு செய்ய இருக்கிறார்கள். 2017ம் ஆண்டு வெளியிட படம் தயாராகி விடும் என்றும் தெரிவித்திருக்கிறது லைக்கா நிறுவனம்.
மேலும், லைக்கா நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'கத்தி' படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு ரீமேக்குகளை ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ராம்சரண் ஆகியோருடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.