

'தி எக்ஸார்சிஸ்ட்' படத்தின் இயக்குநர் வில்லியம் ஃபிரெட்கின் ட்விட்டர் தளத்தில் அளித்த பதிலால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
1973ம் ஆண்டு வில்லியம் ஃபிரெட்கின் இயக்கத்தில் வெளியாகி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'தி எக்ஸார்சிஸ்ட்'. அப்படம் வெளியாகி 42 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து இயக்குநர் வில்லியம் ஃபிரெட்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தோஷத்தை பகிர்ந்தார். அதற்கு செல்வராகவன் பதிலளிக்க, வில்லியம் ஃபிரெட்கின் செல்வராகவனுக்கு பதிலளித்தார். இதனால் செல்வராகவன் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.
இருவருக்கும் நடந்த உரையாடல்கள் அப்படியே..
வில்லியம் ஃபிரெட்கின்: 42 ஆண்டுகளுக்கு முன் 'தி எக்ஸார்சிஸ்ட்' அமெரிக்காவின் 26 திரையரங்குகளில் வெளியானது. அந்த நிகழ்வு நேற்று நடந்ததுபோல் உள்ளது. ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்வராகவன்: இதை நீங்கள் வாசிப்பீர்களா என எனக்குத் தெரியாது. ஆனால், அந்தப் படம் செலுலாய்டு உலகில் ஒரு கவிதை என்றால் மிகையல்ல. அத்திரைப்படம் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல், ஒரு அளவுகோல். நான் இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட இயக்குநர். இதுவரை 10 திரைப்படங்களை இயக்கியுள்ளேன். என்னைப் போல் உங்களை ஆராதிப்பவர் இந்த உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இறைவனுக்கே தெரியும்.
வில்லியம் ஃபிரெட்கின்: நான் உங்கள் கருத்தை வாசித்தேன். மிக்க நன்றி. பெருமைப்படுகிறேன்.
செல்வராகவன்: ஓ மை காட்... எனது வாழ்நாள் லட்சியங்களில் ஒன்று நிறைவேறிவிட்டது.
வில்லியம் ஃபிரெட்கின்: திரைப்பட இயக்குநர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் சமமே. உலகில் எங்கு இருந்தாலும் திரைப்படம் இயக்கும் அனைவரும் சகோதர, சகோதரிகளே.
செல்வராகவன்: தங்களிடம் இருந்து பதில் வந்ததால் பெருமிதம் கொள்கிறேன். என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை, நான் தங்களது தீவிர ரசிகன்.
வில்லியம் ஃபிரெட்கின்: நானும் அவ்வாறே உணர்கிறேன். இனி நாம் தொடர்பில் இருக்கலாம்
செல்வராகவன்: நிச்சயமாக. வரையறைக்கு அப்பாற்பட்ட பெருமையை நான் பெற்றுள்ளேன். இப்போது என் வேண்டுகோள் எல்லாம் நீங்கள் ஒரு முறையாவது இந்தியா வரவேண்டும் என்பதே. இங்கு என்னைப்போல் லட்சோப லட்ச ரசிகர்கள் உங்களை ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என ஏங்குகின்றனர்.