

'லிங்கா' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார் தேவ் கில். இருவரும் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்கள்.
ரஜினி, சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'லிங்கா' படத்தினை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரஜினிக்கு வில்லனாக யார் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எதுவுமே உறுதிபடுத்தப்படவில்லை.
இந்நிலையில் 'லிங்கா' படத்தில் ரஜினிக்கு வில்லனாக தேவ் கில் நடித்து வருகிறார். இது குறித்து தேவ் கில், " 'லிங்கா' படத்தில் நான் நடித்து வருகிறேன். அப்படத்தில் சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் நடப்பது போல் இருக்கும் காட்சிகளில் நடித்து வருகிறேன். அனைத்து நடிகர்களுக்குமே ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று கனவிருக்கும். எனக்கு 'லிங்கா' மூலம் அது நிறைவேறியிருக்கிறது.
பல பெரிய நடிகர்களுடன் நடித்துவிட்டேன். ஆனால் ரஜினி போன்ற ஒரு பெரிய நடிகருடன் நடித்ததன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரிடம் "உங்களது ஒவ்வொரு படமும் சாதனை படைக்கிறது. எப்படி நினைக்கிறீர்கள்?" என்று கேட்டேன். "தேவ்.. நான் நடிக்கும் ஒவ்வொரு படத்தினையும் எனது முதல் படமாகவே கருதுகிறேன்" என்று பதிலளித்தார் ரஜினி" என்று கூறியிருக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான 'போலீஸ் கிரி' இந்தி படத்திற்கு எடிட்டராக பணியாற்றிய சாம்ஜித் தான் 'லிங்கா'விற்கும் எடிட்டராக பணியாற்றி வருகிறார்.