வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படத்தில் கவுதம் மேனன்

வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படத்தில் கவுதம் மேனன்
Updated on
1 min read

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை' திரைப்படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

'அசுரன்' படத்துக்குப் பிறகு சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகளைத் தொடங்கினார் வெற்றிமாறன். எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் இருவருடைய கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது. இதுவரை சுமார் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இதில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு 'விடுதலை' எனப் பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் வாத்தியாராக விஜய் சேதுபதி, கதை நாயகனாக சூரி நடிப்பதாகப் படக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்தப் படத்தின் இசைக்கு முதன்முறையாக இளையராஜா உடன் கை கோத்துள்ளார் வெற்றிமாறன். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டைக் காட்சி இயக்குநராக பீட்டர் ஹெய்ன், கலை இயக்குநராக ஜாக்கி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

தற்போது இந்தப் படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே கவுதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்ததாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறனும், கவுதம் மேனனும் 'பாவக் கதைகள்' ஆந்தாலஜியில் தலா ஒரு குறும்படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கவுதம் மேனன் கடைசியாக 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படத்திலும் காவல்துறை அதிகாரியாக ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in