

தனக்குத் தவறான சிகிச்சை அளித்த மருத்துவருக்கு எதிராக நடிகை ரைசா வில்சன் தேசிய மருத்துவ ஆணையத்திடமும், தமிழக மருத்துவ கவுன்சிலிலும் புகார் அளித்துள்ளார். சட்டரீதியான நடவடிக்கையையும் தொடர்ந்துள்ளார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தோல் சிகிச்சை மருத்துவர் ஒருவரிடம் நடிகை ரைசா வில்சன் முகப்பொலிவு சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதன் பின்னர் அவர் கண்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டதாகப் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்
தனக்கு ஏற்பட்ட விளைவுகளுக்குத் தவறான சிகிச்சையே காரணம் என்பதால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி ரைசா வில்சன், தோல் சிகிச்சை மருத்துவருக்குத் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தோல் சிகிச்சை மருத்துவரும் பதிலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்குமாறு கோரியிருந்தார்.
தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக சனிக்கிழமை அன்று ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் பகிரப்பட்டிருந்த அந்தப் பதிவின் தமிழாக்கம்:
"மருத்துவர்கள் போலியான விளம்பரங்கள் மூலம் அப்பாவி மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்காமல், பொதுமக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்வதாக நினைக்கிறேன். மேலும், மருத்துவத்துறை விதிமுறைகளை மீறி மக்களுக்கு மருந்து பரிந்துரைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் மருத்துவர்களின் செயல்கள் சட்டவிரோதமானவை.
முக்கியமாக, சிகிச்சை தரும் நோயாளியின் அவசரச் சூழலில் உதவி கோரும்போது அதைப் புறக்கணிக்காமல் பதிலளிக்க வேண்டும்.
டாக்டர் பைரவி செந்தில் பல்வேறு சமூக வலைதளங்களில் விடுத்திருந்த விளம்பரங்களை வைத்தே, அழகை மேம்படுத்துவதற்கான குறிப்பிட்ட சில சிகிச்சைகளை செய்துகொள்ள அவரை நான் அணுகினேன். ஆனால், ஆரம்பத்திலிருந்தே டாக்டர் பைரவி செந்திலும் அவரது பணியாளர்களும் என்னிடமிருந்து பணம் பிடுங்க எனக்குத் தவறான சிகிச்சைகளையே செய்து வந்தனர்.
அந்த சிகிச்சையால் என் உயிருக்கே ஆபத்து நேர்ந்தபோது டாக்டர் பைரவி செந்தில் எனக்கு அவசர சிகிச்சை அளிக்க மறுத்தார். மருத்துவர் ஆய்வு செய்தது உள்ளிட்ட என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால் டாக்டர் பைரவி செந்திலின் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர் நான் என்பது தெளிவாகத் தெரியும். எனவே நான் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை.
டாக்டர் பைரவி செந்தில் மற்றும் அவரது ஊழியர்களின் அலட்சியமான போக்கால் பாதிக்கப்பட்ட பெண் நான். எதிர்காலத்தில் யாரும் எனது வலியை அனுபவிக்கக் கூடாது. ஒரு நடிகையாக, எனது செயல்களால் சமூகத்தில் ஏற்படும் தாக்கத்துக்கு நான் பொறுப்பு என நினைக்கிறேன்.
எனவே, இனி அப்பாவி மக்கள் யாரும் டாக்டர் பைரவி செந்திலின் சிகிச்சையால் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய, தேசிய மருத்துவ ஆணையத்திடமும், தமிழக மருத்துவ கவுன்சிலிலும், டாக்டர் பைரவி செந்தில் மற்றும் மற்றவர்களுக்கு எதிராக நான் புகார் அளித்துள்ளேன். அவர்களிடம் சட்டப்படி விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணைக்குப் பின் அதிகாரிகளின் முடிவு தெரியவரும்.
கடைசியாக, தவறான சிகிச்சைக்காக டாக்டர் பைரவி செந்திலிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இந்தச் சட்ட நடவடிக்கையில் எனக்குக் கிடைக்கும் நஷ்ட ஈட்டை, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நன்கொடையாக அளிக்கவிருக்கிறேன்.
கடவுள் மட்டும் நமது நீதித்துறையின் மீதிருக்கும் நம்பிக்கையுடன், மக்களுக்கு என்றுமே சிறந்த மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்".
இவ்வாறு ரைசா வில்சன் குறிப்பிட்டுள்ளார்.