கரோனா நெருக்கடி எதிரொலி: நேரடி ஓடிடி வெளியீட்டை நோக்கி 'நெற்றிக்கண்', 'ராங்கி'?

கரோனா நெருக்கடி எதிரொலி: நேரடி ஓடிடி வெளியீட்டை நோக்கி 'நெற்றிக்கண்', 'ராங்கி'?
Updated on
1 min read

கரோனா நெருக்கடி காரணமாகப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருப்பதால், நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் 'நெற்றிக்கண்', த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் 'ராங்கி' ஆகிய திரைப்படங்கள் நேரடி ஓடிடி வெளியீட்டுக்காகத் தயாராகி வருகின்றன.

இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் முழு ஊரடங்கே நிலவி வரும் நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதில் திரையரங்குகளுக்கு 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி, தினசரி 3 காட்சிகள் மட்டும் அனுமதி, ஞாயிறு அன்று முழு ஊரடங்கால் திரையரங்குகள் திறக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இவ்வளவு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை நடத்தலாமா என்பது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கூடிப் பேசினர். லாபம் இல்லையென்றாலும் இப்போதைக்கு வரும் ரசிகர் கூட்டத்தை வைத்து திரையரங்குகளை நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், ரசிகர் கூட்டம் எதிர்பார்த்த அளவை விட குறைவாகவே வருவதாகத் தெரிகிறது. மேலும், தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திரையரங்குகளை மூடவும் அரசு உத்தரவு பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, 'ராங்கி', 'நெற்றிக்கண்' ஆகிய திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி வெளியீட்டுக்கான பேச்சுவார்த்தையில் உள்ளன. இதில் 'ராங்கி' திரைப்படத்தை வாங்க டிஸ்னி + ஹாட்ஸ்டாரும், அமேசான் ப்ரைம் தளமும் பேசி வருகின்றன. 'நெற்றிக்கண்' திரைப்படத்தை வாங்கும் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் அமேசான் ப்ரைம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில், சரவணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'ராங்கி'. நாயகியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்தக் கதையில் த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'நெற்றிக்கண்'. இதில் நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு த்ரிஷாவின் 60-வது திரைப்படமான 'பரமபதம் விளையாட்டு' டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in