புதுப்பட பேனர் வேண்டாம்... நிவாரணப் பணிகள் போதும்: ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

புதுப்பட பேனர் வேண்டாம்... நிவாரணப் பணிகள் போதும்: ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்
Updated on
1 min read

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள் என்று ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சூர்யா, அமலா பால், பிந்துமாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் நடிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பசங்க-2'. சூர்யாவின் 2டி நிறுவனம் வழங்க இயக்குநர் பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறார்கள். டிசம்பர் 4ம் தேதி வெளியாக இருந்த இப்படம் டிசம்பர் 24ம் தேதி மாற்றி வைக்கப்பட்டது. சென்னையில் வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் தற்போது தான் மீண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களில் பலர் நேரிடையாக களத்தில் நின்றும் வெளியில் இருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். உங்களின் மனித நேயப் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

அன்பின் வெளிப்பாடாக எனக்காக நீங்கள் பேனர்கள் வைப்பதையோ, போஸ்டர்கள் ஒட்டுவதையோ என்றைக்கும் நான் விரும்பியதில்லை. இதை நான் உங்களிடம் பலமுறை நேரிடையாகவே சொல்லியிருக்கிறேன்.

வரும் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ள 'பசங்க 2' திரைப்படத்திற்கு தியேட்டர்களை அலங்கரிக்கும் வேலையைச் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட தலைமை மன்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். வீண் செலவுகளைத் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள்" என்று குறிப்பிட்டு இருக்கிறார் சூர்யா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in