பீப் பாடல் சர்ச்சை: சிம்பு ரசிகர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி

பீப் பாடல் சர்ச்சை: சிம்பு ரசிகர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி
Updated on
1 min read

எங்கள் தலைவர் சிம்புவை சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறி, அவரது வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் 4 பேர் முன் தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியிருப்பதாக கூறப்படும் 'பீப்' பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பல்வேறு அமைப்புகள் சிம்பு வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வரிகள் இருப்பதாக கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை, தஞ்சாவூர், விருதுநகர் உட்பட தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் ஒருவரும் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இவ்வழக்கு டிசம்பர் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும், சென்னை போலீஸார் சிம்புவின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சிம்புவுக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இன்று காலை தி.நகரில் உள்ள சிம்பு வீட்டின் முன்பு அவருக்கு ஆதரவாக 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தார்கள். அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

சிம்பு ரசிகர்களில் ஒருவரான 'கெட்டவன்' ரமேஷ், "'ஒஸ்தி' படத்தில் "வாடி வாடி க்யூட் பொண்டாட்டி" என்று பெண்களைக் கொஞ்சும் வகையில் பாடியிருக்கிறார். பெண்களை போற்றும் வகையில் நல்ல பாடல்களை பாடுவது தான் தலைவர் சிம்புவின் வழக்கம். 'பீப்' பாடல் இறுதிச் செய்யப்படாத பாடல். அதிலும் கூட ஏன் காதலித்துவிட்டு பெண்களைத் திட்டுகிறீர்கள்.

உங்களை நீங்களே திட்டிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் வரிகள் இருக்கிறது. அதை விடுத்து எங்கள் தலைவரை சிக்க வைக்க வேண்டும் என்றே அவரை கைது செய்ய முயற்சிகள் நடக்கிறது. எங்கள் உயிரைக் கொடுத்தாவது எங்கள் தலைவரைக் காப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in