

மறைந்த நடிகர் விவேக் இயக்குநராக அறிமுகமாகவிருந்தது குறித்து தயாரிப்பாளர் தியாகராஜன், படத்தொகுப்பாளர் ரூபன், நடிகை இந்துஜா ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
விவேக்கின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் அவர் இயக்கவிருந்த முதல் திரைப்படம் பற்றிய தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன.
படத்தொகுப்பாளர் ரூபன், "வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலையை ஜீரணிக்க முடியவில்லை. அவர் இயக்கவிருந்த முதல் படத்தின் கதையைக் கேட்க சமீபத்தில் அவரை சந்தித்திருந்தேன். தற்போது கடவுள் அவரது கால் ஷீட்டைப் பெற்று விட்டார். ஒரு கனிவான, எளிமையான ஆன்மா நம்மை விட்டுச் சென்றுவிட்டது" ரூபன் ட்வீட் செய்துள்ளார்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு நல்ல மனிதர், சமூக ஆர்வலர், நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர் மட்டுமல்லாது எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம்.
ஆம் கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சத்ய ஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களுடைய தயாரிப்பில் தான் அவருடைய முதல் படத்தை இயக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு, பல முறை கதை ஆலோசனையிலும் ஈடுப்பட்டு படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகளையும், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடத்திக் கொண்டிருக்கும் தருவாயில் அவர் மறைந்த செய்தி எங்களை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்ற மற்றுமொரு பரிமாணத்தை நம்மிடையே காண்பிக்கும் முன்பே இறைவனடி சேர்ந்தது நமது துரதிர்ஷ்டமே. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்" என்று பகிர்ந்துள்ளார். இதோடு கையில் திரைக்கதை புத்தகத்துடன் சத்யஜோதி அலுவலகத்தில் விவேக் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
விவேக்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த நடிகை இந்துஜா, "மிகப்பெரிய நடிகர் மட்டுமல்ல. மாமனிதர். சினிமாவைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி அவரிடம் நிறைய உரையாடியிருக்கிறேன். சென்ற வாரம் கூட அவர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டார். நான் கண்டிப்பாக நடிப்பதாகச் சொன்னேன். இந்த வாரம் அது குறித்து சந்திப்பதாக இருந்தது. ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது" என்று பேசியிருக்கிறார்.
இவற்றைத் தொடர்ந்து, கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற நடிகர் விவேக்கின் ஆசையும், திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற முயற்சியும் கடைசி வரை நிறைவேறாமல் போனது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.