

உங்களுடன் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லையே என்று விவேக் மறைவுக்கு சிவகார்த்திகேயன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
விவேக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
விவேக்கின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். விவேக்கின் மறைவு குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது:
"அதிர்ச்சியாகவும் சோகமாகவும் இருக்கிறது. உங்களைப் போன்ற ஒரு சகாப்தத்துடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லையே. உங்களைப் போன்ற ஆளுமையிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் தவறவிட்டு விட்டேன். உங்களை என்றென்றும் மிஸ் செய்வேன். குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்"
இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.