

பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ‘பீப்’ பாடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சினிமா என்பது கலைக்கும் பல கோடி வியாபாரத்துக்கும் இடையில் பயணிக்கும் ஊடகம். இதை உணர்ந்துள்ள மக்கள், சில எல்லைகளைத் தளர்த்தி விரிவாக்கித் தந்துள்ளனர். அதுவே எல்லை மீறும்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
முறையாக வெளியிடப்பட்டதா, திருட்டுத்தனமாக கசிந்ததா என்ற சந்தேகங்களுக்கு இடையில், சமீபத்தில் அனிருத் இசைய மைத்து, சிம்பு எழுதி பாடியதாக பாடல் வெளியாகியுள்ளது. அதில் ‘பீப்’ செய்யப்பட்டு கேட்பவர்களின் ஊகத்துக்கு விடப்பட்ட வார்த்தை கள் மிக கொச்சையான உணர்வை யும், பெண்களை இழிவு படுத்துவ தாகவும் இருப்பதால் அது நிச்சயம் கண்டனத்துக்குரியது; கண்டிக்கத் தக்கது.
ஒரு கலைஞனின் கருத்து மக்களிடம் எதிர் விமர்சனங்களை ஏற்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட கலைஞர்கள் வருத்தமோ, மன்னிப்போ கேட்டு தன்னிலை விளக்கம் அளிப்பது கடமை. அந்த கலைஞர்களுக்கு கால அவகாசம் தந்து காத்திருந்தோம். இன்று இந்த விவகாரம் மக்கள் மன்றத்தை மட்டுமல்லாது, நீதிமன்றத்தையும் சென்றடைந்துள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட கலைஞர் கள் விரைவில் இதில் இருந்து விடுபட்டு புதுப்பொலிவுடன் கலைப்பணி ஆற்ற வரவேண்டும். தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்துவரும் இக்காலகட்டத்தில் இந்த ‘பீப்’ பாடல் சம்பவம், சம்பந்தப் பட்டவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து கலைஞர்களுக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது. வருங்காலத்தில் இப்படி மீண்டும் ஒரு சங்கடமான சூழல் உருவாகக் கூடாது என்ற விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு நாசர் தெரிவித்துள்ளார்.