

எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார் என்று விவேக் மறைவுக்கு சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
விவேக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
காலையில் மருத்துவமனையிலிருந்து அவருடைய வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு விவேக்கின் உடலுக்கு சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து விவேக் மறைவு தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாகத் தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார். மீள முடியாத துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருடன் துணை நிற்போம்”
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.