

’விவேக் சார் காமெடியன் அல்ல, உண்மையான ஹீரோ’ என்று நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.விவேக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
விவேக்கின் உடலுக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் விவேக்கின் உடலுக்கு சூரி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:
"இது ரொம்ப கொடூரமானது. அந்த மனுஷன் சினிமாவுக்கு வந்து, 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படங்கள் மூலமாக சமுதாய சீர்திருத்தங்களைக் கொண்டு போய் சேர்த்தவர். அவர் காமெடியன் அல்ல, உண்மையான ஹீரோ. ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட விழிப்புணர்வு செய்யக் கூடியவர். தான் எந்தவொரு விஷயம் செய்தாலும் அது மக்களிடையே போய்ச் சேர வேண்டும் என்று நினைத்த மனிதர்.
அண்ணன் விவேக் சிரித்த, சிந்தித்த கோடிக்கணக்கான மனங்கள் மட்டுமல்ல, அவர் நட்டுவைத்த கோடிக்கணக்கான மரங்கள் கூட அழுது கொண்டிருக்கும்.
இந்த உலகம் உள்ளவரை விவேக் அண்ணன் இருப்பார். நீங்கள் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள். எங்கள் கூடவே இருப்பீர்கள். அந்த இயற்கை தான் அண்ணனின் குடும்பத்துக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்க வேண்டும்"
இவ்வாறு சூரி தெரிவித்துள்ளார்.